×

ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 18 இடங்களில் ரூ.5.78 கோடி மதிப்பீட்டில் 38 வகுப்பறை கட்டிடங்கள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

ஆவடி: திருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 18 இடங்களில் ₹5.78 கோடி மதிப்பீட்டில் 38 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் புதிய மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்துள்ளார். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணபாளையம் ஊராட்சியில் புதிதாக ₹32.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் நேரில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதேபோல் திருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 18 இடங்களில் ₹5.78 கோடி மதிப்பீட்டில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 38 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் புதிய மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கதின் கீழ் திடக்கழிவு மேலாண்மைக்காக ஊராட்சிகளில் சேகரிக்கும் குப்பைகளை எளிதாக கையாளும் பொருட்டு நடப்பு நிதியாண்டில் 236 மின்கல வண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 177 மின்கல வண்டிகள் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுபாக்கத்தில் 22 மின்கல வண்டிகளும், வெள்ளவேடு கொசவன்பாளையம், நசரத்பேட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு தலா 1 மின்கல வண்டியும், நெமிலிச்சேரி, சென்னீர்குப்பம், வாயலாநல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கு தலா 2 மின்கல வண்டிகளும் என ஆக மொத்தம் 31 மின்கல வண்டிகளை அமைச்சர் சா.மு.நாசர் அந்தந்த ஊராட்சி தலைவர்களிடம் வாகனத்திற்கான சாவிகளை வழங்கி சேவையினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கலெக்டர் த.பிரபுசங்கர், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கந்தன்பரமேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தணிகாசலம், ஷிலா சரவணன், திவ்யா பொன்முருகன், வட்டாட்சியர் கோவிந்தராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஊராட்சி ஒன்றியம், அனந்தேரி கிராமத்தில், குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் ₹28 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இந்த வகுப்பறைகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் ₹6 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தையும், எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் எம்எல்ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். நிகழ்ச்சியில், பூண்டி ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர், பொறுப்பு ஊராட்சி தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றனர். ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன், பூண்டி பிடிஒ முரளி, வட்டார கல்வி அலுவலர் பூவராகவமூர்த்தி, தலைமை ஆசிரியர் ஷீபா, மாவட்ட கவுன்சிலர் சுதாகர், மாவட்ட திட்டகுழு உறுப்பினர் அபிராமி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், பூண்டி ஒன்றியம் நெல்வாய் ஊராட்சியில் ₹28 லட்சம் மதிப்புள்ள இரண்டு வகுப்பறை கொண்ட நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். அப்போது, பூண்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் பொன்னுசாமி மற்றும் ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி பொன்னுசாமி குத்து விளக்கேற்றி பள்ளி கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தனர்.

The post ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 18 இடங்களில் ரூ.5.78 கோடி மதிப்பீட்டில் 38 வகுப்பறை கட்டிடங்கள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tiruvallur district ,Tamil Nadu Rural Development ,Panchayat Union Department… ,Dinakaran ,
× RELATED ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 18...