வாலாஜாபாத்: வாலாஜாபாத் அரசு பள்ளியின் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், வாலாஜாபாத் பேரூராட்சியைச் சுற்றிலும் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இங்கு மேல்நிலைப் பள்ளிகள், நூலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், ரயில் நிலையம், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இதில், வாலாஜாபாத் மட்டுமின்றி வாலாஜாபாத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பயின்று வருகின்றனர். மேலும், இவர்களுக்காக பள்ளி வளாகத்திலேயே பிரதான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி வாலாஜாபாத் நகர் பகுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் இளைஞர்களும் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த மைதானம் தற்போது பராமரிப்பின்றி செடிகள் முளைத்து புதர்களாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் பேரூராட்சியின் மையப்பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிரதான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த மைதானம் முறையாக பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே புதர்கள் காணப்படுகின்றன. இந்த புதர்களில் விஷத்தன்மை வாய்ந்த பூச்சிகள் நடமாட்டங்களும் அதிகரித்து காணப்படுகின்றன.
எனவே, மாவட்ட நிர்வாகம் இங்கு ஆய்வு மேற்கொண்டு வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும் இந்த விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
The post வாலாஜாபாத் அரசு பள்ளியின் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா..? எதிர்பார்ப்பில் மாணவர்கள் appeared first on Dinakaran.