×

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு பயிற்சி: மாடு விடும் விழாவுக்கு தயாராகும் காளைகள்


திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழாவுக்கு தயாராகும் காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படும் மாடு விடும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் மாடுகள் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை ஓடி கடந்தால் முதல் பரிசு உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் காளை மாடுகள் வளர்க்கப்படுகிறது. ஒரு வருடமே ஆன சிறிய கன்றுக்குட்டியில் இருந்து இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த காளைகள் குறிப்பிட்ட பருவத்தை எட்டிய பிறகு போட்டியில் பங்கேற்க வைக்கப்படுகிறது.

இந்த காளைகளுக்கு வட மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் தனி மவுசு உண்டு. இந்த காளைகளை அதன் உரிமையாளர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். குறிப்பாக எருது விடும் திருவிழாவுக்கு தயாராகும் மாடுகள் திருப்பத்தூர் மாவட்டத்திலேயே ₹20 லட்சம் வரை விலைபோவதாக கூறப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும், காளைகளை பலர் ஆர்வத்துடன் வாங்கிச்செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, அம்பலூர், பெரியகரம், கந்திலி, வெள்ளக்குட்டை, நிம்மியம்பட்டு, வேலூர் மாவட்டம் லத்தேரி, பேரணாம்பட்டு, ஊசூர், அணைக்கட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் காளை மாடுகள் அதிகளவில் உள்ளது.

பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் காளைகளின் உரிமையாளர்கள், போட்டியில் பங்கேற்கும் காளைக்கு நீச்சல், மண் குவியலை கிளறுதல், நடைபயிற்சி, ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளிக்க தொடங்கியுள்ளனர். மேலும் நவதானிய கூழ், தவிடு, புண்ணாக்கு, பால், நாட்டுக்கோழி முட்டை போன்ற சத்தான உணவுகளையும் கொடுக்கின்றனர். பொங்கல் பண்டிகையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் மாடு விடும் திருவிழாக்கள் நடத்த கலெக்டர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் அனுமதி கேட்டு கிராம மக்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர் அன்புச்செல்வன் கூறியதாவது: விவசாயத்திற்காக மாடுகளை பொதுமக்கள் வளர்த்து வந்தனர். அதன் பின்னர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவற்றுக்கு காளைகளை பிரத்யேகமாக வளர்க்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த காளைகள் விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் பிரத்யேகமாக எருதுவிடும் திருவிழாவுக்காகவே பயன்படுத்தப்பகிறது.

தற்போது காளைகளுக்கு புத்துணர்ச்சியூட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர். மாடுகளுக்கு பயந்த சுபாவம் அதிகம் இருக்கும். இந்நிலையில் மாடுகள் கூட்டம், கூட்டமாக மந்தைகளில் ஓடும்போது மற்ற மாடுகள் அதனை தாக்க வரும்போது பயம் ஏற்பட்டு அசுர வேகத்தில் காளைகள் ஓடும். ஒரு மாடு சுமார் 50 கிமீ வேகத்தில் ஓடும் சக்தியை பெற்றிருக்கும். ஆட்களை பார்த்தவுடன் ஆக்ரோஷமாக ஓடும்போது அதனுடைய இதயத்துடிப்பு உள்ளிட்டவை அதிகளவில் இருக்கும். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி மயங்கி விழுந்து மாடுகள் இறந்து விடுவதும் உண்டு. கடந்த ஆண்டு நிம்மியம்பட்டு கிராமத்தில் நடந்த எருது விடும் திருவிழாவில் வேகமாக ஓடிய ஒரு காளை, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது. இதுபோன்ற ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்கும் மாடுகள் பயிற்சி இன்றி ஓடும்போது சுவாசகோளாறு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். இதனை தடுக்க காளைகளுக்கு நீச்சல், ஓட்டம் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு பயிற்சி: மாடு விடும் விழாவுக்கு தயாராகும் காளைகள் appeared first on Dinakaran.

Tags : Tirupathur district ,Tirupathur ,Pongal Festival ,Tamil Nadu ,Vellore ,Tiruvannamalai ,Krishnagiri ,Dharmapuri ,
× RELATED வாணியம்பாடி அருகே விபத்தில் சிக்கிய காரில் குட்கா கடத்தியது அம்பலம்