சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வித்தியாசமான முறையில், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மாலையில் சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து இணையதள தகவல் வந்துள்ளதாக தகவல் பரப்பப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் தலைமையில், உடனடியாக தீவிரவாதிகள் எதிர்ப்பு பாதுகாப்பு அதிகாரிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதோடு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சென்னை விமான நிலைய போலீசார், சென்னை மாநகர போலீஸ் படையினர், தீயணைப்பு படையினர், மருத்துவ குழுவினர், அதிரடி படையினர், விமான பாதுகாப்பு படையினர் உட்பட அனைத்து தரப்பினரும், அவசரஅவசரமாக விமான நிலைய ஓடுபாதைக்கு விரைந்து வந்து அணிவகுப்புகள் நடத்தினர்.
அப்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 பேரை தீவிரவாதிகள்போல் நடிக்கச் செய்து, அவர்கள் விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதிக்குள் புகுந்து, நாச வேலைகளில் ஈடுபட முயற்சிப்பது போன்றும், விமான நிலைய பாதுகாப்பு அதிரடி படையினர் அந்த 3 பேரையும் சுட்டுப் பிடித்து, உடனடியாக அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது போலவும், பாதுகாப்பு நிகழ்ச்சிகள் தத்ரூபமாக நடத்தப்பட்டன. அதன்பின்பு இந்த ஒத்திகை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தெரிவித்த விமான நிலைய இயக்குனர், கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
The post சென்னை விமான நிலையத்தில் சதி வேலைகள் முறியடிப்பு குறித்த பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை appeared first on Dinakaran.