- யூனியன் அரசு
- சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை
- திருவள்ளூர்
- திருவள்ளூர் மாவட்டம்
- சென்னை - திருப்பதி தேசிய...
திருவள்ளூர்: சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்காததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது சுங்கச்சாவடியை முற்றுகையிட்டதால் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழித்தடம் விரிவாக்கம் செய்வதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத் துறை 50 கிராமங்களைச் சேர்ந்த 600 விவசாயிகளுடைய நிலங்கள் குடியிருப்புகளை கையகப்படுத்தி சாலை வசதியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் முறையாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிலம் கையகப்படுத்தியதற்கான உரிய இழப்பீடு தராமல் ஒன்றிய அரசு காலதாமதம் செய்துவருகிறது. விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ஒரு மடங்கு மட்டுமே இழைப்பீடு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மூன்று மடங்காக இழப்பீடு உயர்த்தி வழங்கிட வேண்டுமென மாவட்ட கலெக்டரை சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை விவசாயிகள் வைத்த கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்றாததால் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் விவசாயிகள் குடும்பத்தினருடன் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அருகே உள்ள பட்டரைப்பெருமந்தூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 30 பெண்கள், 108 ஆண்கள் என 138 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுதலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக நேற்று பட்டரைப்பெருமந்தூர் சுங்க சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து போராட்டம் appeared first on Dinakaran.