திருத்தணி: தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, அதனை பாலிஷ் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று அதிகாலை இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மனவூர் கிராமம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சென்ற மினிவேனை மடக்கி சோதனையிட்டதில், அதில் 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்திய காஞ்சிபுரத்தை சேர்ந்த சலீம் அக்பர் அலி(29), பாலாஜி(18) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி திருத்தணி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
The post திருவாலங்காடு பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.