- மாதவரம் எம். எல்.
- கபடி
- துணை முதலமைச்சர்
- எஸ் சுதர்சனம்
- உதயநிதி ஸ்டாலின்
- சோழவரம் ஒன்றியம்
- திமுக
- இளைஞர் செயலாளர்
- தின மலர்
புழல்: சோழவரம் ஒன்றியத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற வீரர்களுக்கு, மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் பரிசுகளை வழங்கினார். திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு, சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், தொடர் இரண்டு நாள் கபடி போட்டி செங்குன்றம் அடுத்த காந்தி நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில் திருவள்ளூர் சோழவரம், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் காந்தி நகர், மணலி, ராணிப்பேட்டை, வேலூர் ஆந்திரா மாநிலம் நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டியில், வென்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவருமான வே.கருணாகரன் தலைமை தாங்கினார்.
இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாதவரம் எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு, கபடி போட்டியில் வென்று முதலிடத்தை பிடித்த செங்குன்றம் அடுத்த காந்தி நகர் அணிக்கு ₹25 ஆயிரமும், இரண்டாம் இடத்தை பிடித்த கும்மிடிப்பூண்டி அணிக்கு ₹15 ஆயிரமும், மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்த அணிகளுக்கு தலா ₹10 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் நினைவு கோப்பைகளை வழங்கி, சிறப்பித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை காந்தி நகர் திமுக கிளை பிரதிநிதி பிரபு செய்திருந்தார்.
The post துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு: மாதவரம் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.