கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை பகுதியில் நடந்து வரும் மேம்பால பணிகள் வரும் மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்று சசிகாந்த் செந்தில் எம்பி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கிழ்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட கவரப்பேட்டை பஜாரை ஒட்டி பழவேற்காடு சாலை, உத்தரகுளம், தெலுங்கு காலனி, ராஜா தெரு, சத்தியவேடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மாணவர்கள் கவரப்பேட்டை பஜாரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், சிபிஎஸ்சி பள்ளி, மெட்ரிக் பள்ளிகளுக்கு கார், இருசக்கர வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர். மேலும் காய்கறி, பழங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், பாத்திரங்கள் வாங்குவதற்காக கவரப்பேட்டை பஜாருக்கு தினந்தோறும் பயணிக்கின்றனர். கவரப்பேட்டை மையப் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் இரவு பகலாக ஆந்திரா, பீகார், ஒடிசா, அரியானா, டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வருவதும் போதுமாக இருந்து வருகிறது.
இதற்கிடையில் கவரைப்பேட்டை பகுதியில் பழைய மேம்பாலத்தை இடித்துவிட்டு புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பணி மிகவும் சுணக்கமாக நடப்பதால் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்லும் உழியர்கள் கவரப்பேட்டை மேம்பாலத்தை கடக்க சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும் பணிகள் மந்த நிலையில் நடப்பதாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
இதை தொடர்ந்து நேற்று மாலை சசிகாந்த் செந்தில் எம்பி மற்றும் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆகியோர் இணைந்து 1 கிமீ தொலைவில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணி அனைத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், எப்போது பணிகள் முடிக்கப்படும் என்று கேட்டறிந்தனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும், சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது என்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சசிகாந்த் செந்தில் எம்பி பேசுகையில், கவரப்பேட்டை மேம்பால பணிகள் குறித்து முழுவதும் ஆய்வு செய்தேன். மார்ச் மாதத்துக்குள் இந்த பணி முடிவடையும். மேலும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் எரியாத மின்விளக்குகள் சீரமைக்கப்படும் என்றார்.
The post கவரப்பேட்டை பகுதியில் நடந்து வரும் மேம்பால பணிகள் மார்ச் மாதம் நிறைவடையும்: சசிகாந்த் செந்தில் எம்பி தகவல் appeared first on Dinakaran.