×

திமுக ஆட்சியில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் மனசாட்சியை மறந்து பாமக பேசுவதா? அமைச்சர் எ.வ.வேலு தாக்கு

சேலம்: வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்துள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக மனசாட்சியை மறந்து பாமக பேசுகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 1999ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் விவசாயிகளின் நலன் கருதி 100 இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில், அப்போதைய வேளாண்துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் உழவர்சந்தையை கொண்டு வந்தார்.

தற்போது அந்த உழவர்சந்தைகள் தொடங்கி, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  சேலம் சூரமங்கலம் உழவர்சந்தையில் நேற்று காலை வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன் ஆகியோர் வந்து, விவசாயிகளிடம் விற்பனை குறித்தும், காய்கறிகளை வாங்க வந்த மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி:

உழவர் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. 100 உழவர்சந்தைகளை ரூ.27.50 கோடியில் முதல்வர் புனரமைத்து கொடுத்துள்ளார். அதேபோல் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட்டை கொண்டு வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அந்த தனி நிதிநிலை அறிக்கையில் கடந்த 2021-22ம் நிதியாண்டில் ரூ.32,775 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். 2022-23ல் ரூ.33,007 கோடியும், 2023-24ல் ரூ.38,904 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து, விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் நீர்வளத்துறையை உருவாக்கி, அதற்காக மூத்த அமைச்சர் துரைமுருகனை நியமித்து, நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது. தோழமை கட்சிகள் இந்த ஆட்சியை பாராட்டி வருகின்றன. காரணம், அவர்கள் அருகில் இருந்து பார்க்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக பாமக தற்போது மனசாட்சியை மறந்து பேசி வருகிறது. மனசாட்சியோடு இருப்பவர்கள் இப்படி பேச மாட்டார்கள். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

The post திமுக ஆட்சியில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் மனசாட்சியை மறந்து பாமக பேசுவதா? அமைச்சர் எ.வ.வேலு தாக்கு appeared first on Dinakaran.

Tags : PMK ,DMK ,Minister ,E.V. Velu ,Salem ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,Kalaignar Karunanidhi ,Dinakaran ,
× RELATED மாணவி பாலியல் விவகாரத்தை அரசியல்...