×

சூரத் டூ தாய்லாந்து விமான சேவை தொடக்கம் விமானத்தில் இருந்த மொத்த சரக்கையும் குடித்தே காலி செய்த குஜராத் பயணிகள்

மும்பை: காந்தி பிறந்த மண் என்பதால் குஜராத்தில் மதுபானம் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை, அருந்துவது ஆகியவை தடை செய்யப்பட்டு உள்ளன. ஆனால் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு நட்சத்திர உணவகங்களில் மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து வௌிநாடுகளுக்கு வைரம் ஏற்றுமதி செய்வதற்காக அண்மையில் சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் சூரத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு புதிய விமான சேவையை தொடங்கி உள்ளது. வௌிநாட்டுக்கு இயக்கப்பட்ட விமானம் என்பதால் குஜராத்தில் இருந்து சென்றாலும் அதில் மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த வௌ்ளிக்கிழமை(20ம் தேதி) சூரத்தில் இருந்து பாங்காக் சென்ற முதல் விமானத்தில் 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் சென்றனர். இந்த விமானத்தின் பயண நேரம் 4 மணி நேரமாகும். இந்த விமானம் பட்ஜெட் விமானம் என்பதால் பயணிகள் பணம் கொடுத்தே மதுபானம் வாங்க வேண்டும். அந்த வகையில் விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஏராளமான பயணிகள் மது வாங்கி பருகினர். பணம் கொடுத்து வாங்க வேண்டியிருந்தாலும் மொத்த பயண நேரத்திற்குள் ஏராளமான பயணிகள் தொடர்ந்து மது வாங்கி அருந்தி உள்ளனர். இதனால் 4 மணி நேரத்துக்குள் ரூ.1.8 லட்சம் மதிப்பில் 15 லிட்டருக்கும் மேல் மது விற்று தீர்ந்துள்ளது. விரைவில் மது தீர்ந்து விட்டதால் பயணிகள் கோபமடைந்து தங்கள் கோபத்தை சமூக ஊடகங்களில் வௌியிட்டனர்.

இதுகுறித்து விமான அதிகாரிகள் கூறியதாவது, “விமானத்தில் போதிய அளவு மதுவும், உணவும் இருந்தது. பொதுவாக விமான பயணிக்கு 100 மில்லிக்கு மேல் மதுபானம் தரப்படுவதில்லை. விமானத்தில் 5 வகையான மதுபானங்கள் வழங்கப்படுகிறது. சிவாஸ் ரீகல் மது 50 மில்லி ரூ.600. 50 மில்லி ரெட் லேபிள், பகார்டி ஒயிட் ரம் மற்றும் பீ பீஸ்டர் ஜின் ஆகியவை ரூ.400க்கு விற்கப்படுகிறது. உணவை பொறுத்தவரை முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது விமானத்தில் பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம்” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

The post சூரத் டூ தாய்லாந்து விமான சேவை தொடக்கம் விமானத்தில் இருந்த மொத்த சரக்கையும் குடித்தே காலி செய்த குஜராத் பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Surat To Thailand ,Gujarat ,Mumbai ,Gandhi ,Air ,
× RELATED குஜராத் மாநிலம் சூரத் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து