×

உத்தரபிரதேசத்தில் மறைந்திருந்த 3 காலிஸ்தான் ஆதரவு; தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

பிலிபித்: உத்தரபிரதேசத்தில் மறைந்திருந்த 3 காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டம் புரன்பூர் பகுதியில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச காவல் துறையின் தனிப்படையினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் மூன்று காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து பிலிபித் எஸ்பி அவினாஷ் பாண்டே கூறுகையில், ‘பஞ்சாபைச் சேர்ந்த சில காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் புரன்பூர் பகுதியில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச கூட்டு நடவடிக்கை படை அமைக்கப்பட்டது. அவர்கள், கமரியா பாயிண்டில் சுற்றிவளைத்த போது போலீசார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடி கொடுத்ததில் மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பிலிபித் காவல்துறையைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் காயமடைந்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரவாத கும்பலிடம் இருந்து 2 ஏகே-47 ரக துப்பாக்கிகள், 2 ஏகே துப்பாக்கிகள், 2 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட க்ளோக் கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளை மீட்டோம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது. அவர்கள் கையெறி குண்டுகளை வீசினார். முன்னதாக பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் தெஹ்ஸிலில் நடந்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட குர்விந்தர் சிங் (25), வீரேந்தர் சிங் (23), ஜஸ்பிரீத் சிங் (18) ஆகிய மூவரும் குர்தாஸ்பூரை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் தான் காலிஸ்தான் ஜிந்தாபாத் படை என்ற அமைப்பை உருவாக்கி சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

The post உத்தரபிரதேசத்தில் மறைந்திருந்த 3 காலிஸ்தான் ஆதரவு; தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Khalistan ,Uttar Pradesh ,Pilibhit ,Gallistan ,SPY DEPARTMENT POLICE ,GALISTAN ,PURANPUR ,PHILIPBID DISTRICT ,UTTAR PRADESH STATE ,
× RELATED 11-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற...