*பொதுமக்கள் கோரிக்கை
பொள்ளாச்சி : ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் கலக்கும் கழிவுநீரால் துர்நாற்றம், கொசு உற்பத்தியை தடுக்க சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சி 36வது வார்டில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேரும் கழிவுநீர், ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள கிருஷ்ணா குளத்தில் கலக்கிறது.
நகர எல்லையின் ஒருபகுதியான பொட்டுமேட்டில் இருந்து ஆரம்பிக்கும் பெரிய அளவிலான கழிவுநீர் ஓடை மரப்பேட்டைவீதி, நேருநகர், கண்ணப்பன்நகர் வழியாக ஜமீன்ஊத்துக்குளி பாலத்தை கடந்து கிருஷ்ணாகுளத்தை சென்றடைகிறது.
சுமார் 35 ஆண்டுக்கு முன்பு, கிருஷ்ணா குளத்தில் மழையால் தேங்கியிருந்த தண்ணீர் விவசாய பாசனத்துக்கும், அப்பகுதி மக்கள் தேவைக்கும் பயன்பட்டு வந்தது. மேலும் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் இந்த குளத்தில் குளித்து செல்வதை தொடர்ந்திருந்தனர்.
ஆனால் பல ஆண்டுகளாக இக்குளத்தில் கழிவுநீர் கலப்பது தொடர்ந்ததால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. மேலும் தண்ணீரின் நிரம்மாறி மாசு படிந்தது. தற்போது இந்த குளத்தில் உள்ள தண்ணீரை மக்கள் எந்த பயன்பாட்டுக்கும் எடுப்பதில்லை.
நகரில் இருந்து வெளியேரும் கழிவுநீர் கிருஷ்ணா குளத்தில் கலக்கும்போது, கழிவு பொருட்கள் அதிகளவில் ஓடையில் தேங்கி நிற்கிறது. மழைகாலத்தில் குளத்தில் உள்ள தண்ணீர் சுத்தமாக இருப்பதுபோல் தெரிகிறது.
பின் தண்ணீர் வற்றியபோது கழிவுபொருட்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. கழிவுநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. கழிவுநீர் வரும் ஓடை அருகே பல குடியிருப்புகள் அமைந்துள்ளது. ஓடையில் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என்று தொடர்ந்து குற்றசாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணா குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைத்து அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை குளத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொள்ளாச்சி வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக படகு சவாரி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.ஆனால் இதுநாள் வரை குளத்தை சுத்தம் செய்யவதற்கான எந்த முயற்சியும் எடுக்கமாலும், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைக்கப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த ஜமீன்ஊத்துக்குளி குளத்தில் தேங்கும் குழிவுநீராலும், ஆகாயதாமரையாலும் கொசுஉற்பத்தி அதிகரிப்பதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அபாயகரமாக உள்ள கிருஷ்ணா குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருக்க சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post துர்நாற்றம், கொசு உற்பத்தியை தடுக்க கிருஷ்ணா குளத்தில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும் appeared first on Dinakaran.