×

வி.கே.டி. சாலையில் உயர்மட்ட பாலம் பயன்பாட்டுக்கு வரும் முன்பே சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்படும் அவலம்

* மதுபாட்டில்களை வீசி செல்லும் போதை ஆசாமிகள்

* எச்சரிக்கை பதாகைகள் வைக்க வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் விருத்தாசலம்-புவனகிரி சாலையின் மேலே செல்லும் விகேடி உயர்மட்ட பாலத்தில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை உடைத்து வீசி வருவதால் எங்கு பார்த்தாலும் கண்ணாடி சிதறல்கள் காணப்படுகிறது.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உயர்மட்ட பாலத்தின் அருகே இளைஞர்கள் பைக் ரேஸிலும் ஈடுபட்டு வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

இப்பகுதியில் வி.கே.டி. சாலை விரிவாக்க பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனம் உயர்மட்ட பாலத்தின் கட்டுமான பணிகளை 90 சதவீதம் முடித்துள்ள நிலையில் சாலையின் இருபுறங்களின் நடுவே மரக்கன்றுகளையும் வைத்து பராமரித்து வருகின்றனர்.

பாலத்தின் அழகையும், மரக்கன்றுகளின் அழகையும் சீர்குலைக்கும் விதமாக சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு கண்ணாடி மதுபாட்டில்களை உடைத்து தூள் தூளாக்கி விட்டு பாலத்தின் நடுவே போட்டு விட்டு செல்வதால் நடைபயிற்சி செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் வி.கே.டி சாலை விரிவாக்க பணிகளில் தற்போது சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை இணைக்கும் விதமாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு வரும் முன்பே வி.கே.டி. சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் சாலை சரிவு ஏற்படுத்தும் விதமாகவும் இரவு, பகல் நேரங்களில் அனுமதியின்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

பணிகள் நடைபெற்று கொண்டிருப்பது தெரிந்தும் வாகன ஓட்டிகள் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கி உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகனங்கள் செல்வதை தடை செய்யும் விதமாக எச்சரிக்கை பதாகைகளை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post வி.கே.டி. சாலையில் உயர்மட்ட பாலம் பயன்பாட்டுக்கு வரும் முன்பே சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்படும் அவலம் appeared first on Dinakaran.

Tags : VKT Road High-Level Bridge ,Sethiyathoppu ,VKT High-Level Bridge ,Virudhachalam-Bhuvanagiri Road ,Cuddalore district… ,Dinakaran ,
× RELATED சேத்தியாத்தோப்பு அருகே வீடு தீப்பிடித்து நாசம்