×

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தகவல் சரிபார்ப்பக்கம் விளக்கம்!

சென்னை: குடியரசு தின விழாவிற்கான தமிழ்நாட்டின் அலங்கார அணிவகுப்பு ஊர்தியை ஒன்றிய அரசு நிராகரித்ததாக வெளியான செய்தி வதந்தி என மாநில அரசின் தகவல் சரிபார்ப்பக்கம் விளக்கம் அளித்துள்ளது. குடியரசு தின விழா அன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உயர்த்தி பிடிக்கும் அலங்கார அணிவகுப்பு ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை என எக்ஸ் தளத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அத்துடன் தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள இந்த செய்தியில் உண்மை இல்லை என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜனவரி 6ம் தேதி அன்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தகவல் சரிபார்ப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அனைத்து மாநிலங்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் நடப்பாண்டில் அணி வகுப்பில் பங்கேற்கும் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு அனுமதி கிடையாது.

அதன்படி தமிழ்நாட்டு அணிவகுப்பு ஊர்தி 2025ம் ஆண்டுக்கு பதிலாக 2026ம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும். இதை சுட்டிக்காட்டியுள்ள தகவல் சரிபார்ப்பகம் தமிழ்நாடு அரசு அணிவகுப்பு ஊர்திக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை என்பது வதந்தி என விளக்கம் அளித்துள்ளது. மறு சுழற்சி முறையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதால் ஜனவரியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாடு அரசு ஊர்தி பங்கேற்க இயலாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தகவல் சரிபார்ப்பக்கம் விளக்கம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Republic Day ,Chennai ,State Government ,Union Government ,Delhi ,Nadu ,
× RELATED குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு...