×

ஒரு நாள் முழுவதும் அஸ்வினுடன் கூடவே இருந்தேன்… ஆனாலும் தெரியல! ஓய்வு அறிவிப்பால் ஜடேஜா கவலை

மெல்போர்ன்: ‘ஒரு நாள் முழுவதும் சேர்ந்தே இருந்தோம். கடைசி 5 நிமிடத்துக்கு முன்பு வரை, தான் ஓய்வு பெறப்போவதை பற்றி அஸ்வின் எதுவுமே கூறவில்லை’ என இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் 3வதாக மெல்போர்ன் நகரில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது.

அதைத் தொடர்ந்து, இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா கூறியதாவது: அஸ்வின் ஓய்வை அறிவித்த நாள் முழுவதும் அவருடன்தான் இருந்தேன். பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு 5 நிமிடம் முன்புதான் அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற அதிர்ச்சித் தகவலை அறிந்தேன். அதைப் பற்றி அதற்கு முன் ஒரு வார்த்தை கூட அஸ்வின் கூறவில்லை.

போட்டிக் களத்தில் என்னை வழிநடத்துவோரில் அவரும் ஒருவர். களத்தில் உள்ள மற்ற இந்திய வீரர்களுக்கும் அடுத்து என்ன செய்யலாம் என்ற அறிவுரைகளை தொடர்நது வழங்கிக் கொண்டே இருப்பார். அவரை போன்ற ஒரு வீரர் கிடைப்பது அரிது. இனி வரும் போட்டிகளில் அஸ்வினை மிகவும் ‘மிஸ்’ செய்யப்போகிறேன். இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு போட்டிகளில் இந்திய அணி இக்கட்டான தருணங்களில் இருந்தபோது அஸ்வினும், ஜடேஜாவும் சேர்ந்து அணியை மீட்டதோடு அல்லாமல் பல முறை வெற்றி பெறவும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஒரு நாள் முழுவதும் அஸ்வினுடன் கூடவே இருந்தேன்… ஆனாலும் தெரியல! ஓய்வு அறிவிப்பால் ஜடேஜா கவலை appeared first on Dinakaran.

Tags : Ashwin ,Jadeja ,Melbourne ,Ravindra Jadeja ,Rohit ,Australia ,
× RELATED ரவிச்சந்திரன் அஸ்வின் உணர்ச்சிகரமான தருணம்! #ThankYouAsh #ashwin