கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று நடந்த மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 41 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியது. மலேசியாவில் 19 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பைக்கான டி20 போட்டிகள் நடந்து வந்தன. இந்த போட்டிகளின் முடிவாக நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய இந்தியாவின் கோங்காதி திரிஷா 47 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன் குவித்தார். மற்றொரு துவக்க வீராங்கனையும் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பருமான கமாலினி 5 ரன்னுக்கு அவுட்டானார். பின் வந்தோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்ததால், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்தது. வங்கதேசத்தின் பர்ஜனா ஈஸ்மின் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதன் பின், 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய மொசாமத் ஈவா ரன் எடுக்காமலும், பஹோமிதா சோதா 18 ரன்னுக்கும் அவுட்டாகினர். ஜுய்ரியா பெர்தோஸ் 22 ரன் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர்.
18.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்னுக்கு வங்கதேசம் ஆட்டமிழந்தது. இதனால், 41 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவின் ஆயுசி சுக்லா 17 ரன் தந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகியாக இந்தியாவின் கோங்காதி திரிஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
The post மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா: சொற்ப ரன்னில் வீழ்ந்த வங்கதேசம் appeared first on Dinakaran.