×

தாயின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த ரூ.30ஆயிரத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் வாலிபர் தற்கொலை: சைதாப்பேட்டையில் சோகம்

சென்னை: சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (28). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துள்ளார். இவரது தந்தை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துள்ளார். இதனால் ஆகாஷ் தனது தாய் மற்றும் அண்ணனுடன் வசித்து வந்தார். ஆகாஷின் தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு அதிக பணம் தேவைப்படும் சூழலில் ஆகாஷுக்கு சரியான வேலையும் இல்லை. அவ்வப்போது கேட்டரிங் வேலைக்கு சென்று வந்த ஆகாஷுக்கு போதிய சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் அவர் மன வருத்தம் அடைந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் எவ்வளவு தான் கஷ்டப்படுவது, எப்படி சம்பாதிப்பது என குழம்பி போய் மன வருத்தத்தில் இருந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் இவரது தாய் மார்பக புற்றுநோயால் பாதிகப்பட்டு 4வது ஸ்டேஜில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடுவதை பழக்கமாக கொண்ட ஆகாஷ் நேற்று முன்தினம் தாயின் சிகிச்சை செலவுக்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் அவரது தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் ஆகாஷை கடிந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆகாஷ் நேற்று முன்தினம் மாலை முதல் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் ஆகாஷின் தாயும் அண்ணனும் தேடி வந்துள்ளனர். இரவும் காணாததால் அதிகாலை 3.30 மணி அளவில் ஆகாஷின் அண்ணன் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கே அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து ஆகாஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஆகாஷின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ஆகாஷின் தாய் கூறுகையில், ‘‘என் மகன் சமீபத்தில் ஆன்லைனில் ரம்மி விளையாடி உள்ளார். முதலில் பணம் வந்ததால் என் சிகிச்சைக்கான ரூ.30 ஆயிரத்தையும் வைத்து விளையாடி உள்ளார். ஆனால் மீண்டும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. வங்கி கணக்கில் பணம் குறைந்தது பற்றி மகனிடம் கேட்டேன். அதற்கு விரைவில் வந்துவிடும் என கூறினான். ஆனால் பணம் வரவில்லை. இதனால் தற்கொலை செய்து உள்ளான்’’ என கண்ணீர் மல்க கூறினார்.

* அரசு இயற்றிய சட்டப்பிரிவு ரத்தால் சிக்கல்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இதற்கு பலர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்வது தான் காரணம். சமீபத்தில் தமிழக ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டில்ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சட்டம் அமலுக்கு வந்தது.

ஆனால் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் தடைக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழ்நாடு சூதாட்ட தடை சட்டத்தில் ரம்மி, போக்கர் ஆன்லைன் விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்றுகூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்தது. இந்த விளையாட்டுகளை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தாயின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த ரூ.30ஆயிரத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் வாலிபர் தற்கொலை: சைதாப்பேட்டையில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Saidapet ,Chennai ,Akash ,Chinnamalai 2nd Street, Saidapet, Chennai ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக பிரதான வாயில்...