×

இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை 5.29 லட்சம் பயனாளிகளுக்கு நீட்டிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் சார்பில் கடிதம்

சென்னை: இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை 5.29 லட்சம் பயனாளிகளுக்கு நீட்டித்து வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு முதல்வர் சார்பில் அமைச்சர் மதிவேந்தன் கடிதம் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் மத்திய ஆலோசனை வாரியத்தின் 7-வது குழுக்கூட்டம் புதுடெல்லி அம்பேத்கர் சர்வதேச மைய வளாகத்தில் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் தலைமையில் நேற்று நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இயக்குநர் லஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல்வரின் சீரிய வழிகாட்டுதலில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்களின் நிலையினை அமைச்சர் மதிவேந்தன் இந்த கூட்டத்தில் எடுத்துரைத்தார். முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படுவது என்பது மாற்றுத்திறனாளிகள் நலன் பேணும் இந்த அரசின் அசைக்க முடியாத அர்பணிப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு என அமைச்சர் மதிவேந்தன் வாரிய உறுப்பினர்களிடையே எடுத்துரைத்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கண்டறிய மேற்கொள்ளப்பட்ட மாநிலம் தழுவிய கள கணக்கெடுப்பு பற்றியும், புற உலக சிந்தனை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உயர்தனிச் சிறப்பு மையம் உருவாக்கியது பற்றியும், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தினை முழுமையாக அமலாக்க மேற்கொண்ட நடவடிக்கைககளை விளக்கியும் மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதை அவர் விளக்கினார்.

ஒன்றிய அரசின் தனித்துவ அடையாள அட்டையின் தரவுத்தளத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்த இருவழி மின்னிசைவு கோரியும் மாநில ஆணையர் அலுவலக உருவாக்கத்திற்கு ரூ.2.21 கோடி நிதி வழங்கவும் புற உலக சிந்தனை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உயர்தனி சிறப்பு மையத்தினை மேலும் வலுப்படுத்த ரூ.25 கோடி நிதி வழங்கவும் ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை விடுவிப்பு நிலை குறித்த ஆண்டறிக்கையை மாநில அரசுகளுக்கு ஆண்டு தோறும் வழங்கவும் தடையற்ற சூழல் அமைக்க ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையான ரூ.29 கோடியினை விடுவிக்கவும்,

63 ஆயிரம் பயனாளிகளுக்கு மட்டும் ஒன்றிய அரசால் வழங்கப்படும் இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையான ரூ.300-ஐ மேலும் 5.29 லட்சம் பயனாளிகளுக்கும் நீட்டிக்கவும், தமிழ்நாடு அரசு வருவாய் துறை மூலம் தற்போது வழங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500 ஐ முழுவதும் ஒன்றிய அரசு ஏற்று வழங்கவும், தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிற்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கான நிதியினை விரைவாக விடுவிக்க முதல்வர் சார்பாக அமைச்சர் மதிவேந்தன் ஒன்றிய அமைச்சரிடம் கடிதம் வழங்கினார்.

The post இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை 5.29 லட்சம் பயனாளிகளுக்கு நீட்டிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் சார்பில் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Indira Gandhi ,PM ,EU government ,Chennai ,Minister ,Madhivendan ,Indra Gandhi ,Central Advisory Board of Disabled Persons New Delhi Ambedkar International ,Dinakaran ,
× RELATED அமைதி, வெற்றிகள் நிறைந்த நல்ல உடல்...