×

டி20 தொடரை வென்ற வங்கதேசம் பழிக்கு பழி! 3வது போட்டியிலும் வெ.இ. படுதோல்வி

கிங்ஸ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபாரமாக வெற்றி பெற்ற வங்கதேசம், அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சென்ற வங்கதேசம் முதலில் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது.

தொடர்ந்து இந்த அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடின. முதல் 2 போட்டிகளை வென்ற வங்கதேசம் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் அதே கிங்ஸ்டவுனில் நடந்தது. முதலில் விளையாடிய வங்கம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 189ரன் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாகிர் அலி ஆட்டமிழக்காமல் 72 (41 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) ரன், பர்வேஸ் ஹோசைன் 39(21பந்து, 4பவுண்டரி, 2சிக்சர்) ரன் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெபார்ட் 2 விக்கெட் எடுத்தார். அதனையடுத்து 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. அந்த அணியில் ரொமாரியோ ஷெப்பார்டு 33 (27பந்து, 1பவுண்டரி, 3சிக்சர்), ஜான்சன் சார்லஸ் 23 (18பந்து, 4பவுண்டரி) ரன் எடுத்தனர். மற்றவர்கள் குறைந்த ரன்னில் நடையை கட்டினர். அதனால் வெஸ்ட் இண்டீசை 16.4 ஓவரில் 109 ரன்னில் சுருட்டிய வங்கதேசம் 80 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.

வங்கதேச வீரர்கள் ரிஷத் ஹோசைன் 3, தஸ்கின் அகமது, மெகிதி ஹசன் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் வங்கம் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன், வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்து பதிலடி கொடுத்தது. ஆட்ட நாயகனாக ஜாகிர் அலி, தொடர் நாயகனாக மெகிதி ஹசன் என வங்கதேச வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

The post டி20 தொடரை வென்ற வங்கதேசம் பழிக்கு பழி! 3வது போட்டியிலும் வெ.இ. படுதோல்வி appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,T20 ,West Indies ,Kingstown ,Dinakaran ,
× RELATED ஐசிசி டி20 மற்றும் ஒருநாள்...