×

நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு ராகுல் மீதான வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் பாஜ எம்.பி.க்கள் இருவர் காயமடைந்தது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் பா.ஜ மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் நடத்திய போராட்டத்தில் பா.ஜ எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக பா.ஜவினர் அளித்த புகார் அடிப்படையில் ராகுல்காந்தி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த அடிப்படையில் ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதற்கட்டமாக இந்த வழக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தாக்குதல் தொடர்பான சிசிடிவி, வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம், பா.ஜ., எம்.பி.,க்கள் தவறாக நடந்து கொண்டதாக, காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில், தனி எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது குறித்து, போலீசார் சட்ட ஆலோசனையை நாடியுள்ளனர். இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

* ராகுல் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
பாஜ பெண் எம்.பி பாங்னான் கொன்யாக்கிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறிய புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு ராகுல் மீதான வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Crime Branch ,New Delhi ,BJP ,Parliament ,Delhi Police ,Congress ,Pratap… ,Dinakaran ,
× RELATED அரசுக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு...