- மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா
- மெரினா
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- நகர்ப்புற வாழ்வாதாரம்
- இயக்கம்
- மகளிர் சுய உதவிக் குழுக்கள்
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மெரினாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா மெரினாவில் வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மகளிர் உடனடியாக சமைத்து சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி – மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தர்மபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி – அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகப்பட்டினம் மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம் பொரி, சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
67 வகையான தயார் நிலை உணவுப் பொருட்களை, உணவுத் தரச் சான்றிதழ் (FSSAI) பெற்ற 24 குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையிலும், கலப்படம் ஏதுமின்றியும் தயாரித்து, தகுந்த முறையில் கட்டுமானம் (Packaging) செய்து விற்பனை செய்திட 6 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச விலையாக ரூ.30 முதல் அதிகபட்சமாக ரூ.200 வரை விற்கப்படுகிறது. 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. தொடக்க நாளான நேற்று மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி உணவு திருவிழா நடந்தது. வரும் 24ம் தேதி வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். உணவுத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள், லேடி விலிங்டன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post மெரினாவில் வரும் 24ம் தேதி வரை நடக்கிறது மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.