×

பொங்கல் நாளில் யுஜிசி – நெட் தேர்வு; அட்டவணையை மாற்றாவிட்டால் போராட்டம்: திமுக அறிவிப்பு

சென்னை: ‘உலகப்பெருவிழாவான பொங்கல் நாளில் யுஜிசி நெட் தேர்வு என்று அறிவித்த ஒன்றிய அரசுக்கு திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது. யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையை மாற்றாவிடில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒன்றிய பா.ஜ.க. அரசின் கீழ் இயக்கும் தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) அறிவித்துள்ள “யுஜிசி நெட்” தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 30 பாடங்களுக்கானத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தமிழர்களின் பண்பாட்டையும் அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) தேர்வு கூட பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டது. பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அறிவிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது. தமிழர்களின் ஒற்றுமைக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாக விளங்கும் பெருவிழா பொங்கல்.

“நாம் காணும் பொங்கல் விழா, உலகெங்கிலும் பிறந்து மொழி பயின்று வாழும் மனித குலத்துக்கே பொதுவான விழா! ஆம்! பசிக்கின்ற நல் வயிறு படைத்துள்ள மனித இனம் முழுவதுக்கும் சொந்தமான உலகப்பெருவிழா!” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்படும் உலகப் பெருவிழாவினை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக அவமரியாதை செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அறிவிக்கப்பட்ட “யுஜிசி – நெட்” தேர்வு அட்டவணையை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாடெங்கும் போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பொங்கல் நாளில் யுஜிசி – நெட் தேர்வு; அட்டவணையை மாற்றாவிட்டால் போராட்டம்: திமுக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : UGC — NET ,Pongal Day ,Dimuka ,Chennai ,Union Government ,UGC Net ,World Festival Pongal Day ,UGC-NET ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கடிதம்