×

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது: மின்சார வாரியம் அறிக்கை

சென்னை: மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. நாட்டிலேயே முதல் முறையாக 1986 ஆம் ஆண்டில் காற்றாலை மூலமாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தியில் சுமார் 11,000 மெகா வாட் நிறுவு திறனுடன் இந்தியாவிலேயே இரண்டாவது இடமும், சூரிய ஒளிச்சக்தி மின்சார உற்பத்தியில் சுமார் 9,400 மெகா வாட் நிறுவு திறனுடன் நாட்டிலேயே மூன்றாவது இடமும் தமிழ்நாடு பெற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கென தனியே தமிழ்நாடு பசுமை மின்உற்பத்தி நிறுவனம் (Tamil Nadu Green Energy Company Limited) தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு மிகச்சிறப்பான பணியினை செய்து வருகிறது.

இது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத பசுமை எரிசக்தி உற்பத்தியை தமிழ்நாட்டில் மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவினை நனவாக்கும் வகையில் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் எனும் அளவு மின்சாரத்தை, சூரிய மின்சக்தி, காற்றாலை ஆகியவற்றுடன் சேர்த்து வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புகளான நீரேற்று மின் திட்டங்கள் (Pumped Storage Projects), மின்கல சேமிப்பு திட்டங்கள் (Battery Energy Storage Systems), உயிரி ஆற்றல் (Bio-Mass) மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் (Co-Gen) வாயிலாகவும் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், ஒன்றிய அரசின் 2030 ஆம் ஆண்டுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கென 43 சதவீதமாக இலக்கை நிர்ணயித்துள்ள போதிலும் தமிழ்நாடு அரசு 50% என்ற மிக உயரிய இலக்கினை அடையத் திட்டமிட்டு அதற்கான பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தி வருகிறது. புதுப்பிகத்தக்க மின் உற்பத்தியில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் இருந்த போதிலும், மரபுசார மின்சக்தி வருடத்தின் அனைத்து நாட்களிலும் சீராக கிடைப்பதில்லை, ஒவ்வொரு நாளிலும் காலையில் கிடைக்கும் அளவு மாலையில் கிடைப்பதில்லை. இவ்வாறு சீராகப் பெறப்படாத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கொண்டு அதிகரிக்கும் மின் தேவையை நிறைவு செய்யவும், மின் கட்டமைப்பின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் மொத்த மின் தேவையில் குறிப்பிடத்தக்க அளவு மரபு சார்ந்த மின் உற்பத்தி அவசியமாகிறது.

அரசு பொறுப்பேற்ற இந்த மூன்றரை ஆண்டுகளின் தமிழ்நாடு தொழில்துறையில் மாபெரும் வளர்ச்சியினைக் கண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டுகள் அதிகரித்து வருவதன் காரணமாக ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை 10% அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வாறான அத்தியாவசிய தேவையின் அடிப்படையிலேயே உடன்குடி மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தற்போது எண்ணூரில் அமைய இருக்கின்ற திட்டம் தமிழ்நாட்டில் உள்ள மின் கட்டமைப்பின் பாதுகாப்பை (Grid Stability) உறுதி செய்ய உதவுவதுடன் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் உறுதுணையாக இருக்கும். இனி வரும் காலங்களிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, பொதுமக்களுக்கும் வேலை வாய்ப்பினை நல்கும் தொழிற்சாலைகளுக்கும் தரமான மின்சாரத்தை நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மரபு சார்ந்த மின் உற்பத்தியுடன் மிக அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியும் செய்யும் வகையில் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இதன் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன், நாட்டிலேயே புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் முதன்மை மாநிலமாகத் திகழும்.

The post புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது: மின்சார வாரியம் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Electricity Board ,Chennai ,Dinakaran ,
× RELATED நீதிபதிகள் குடியிருப்பில் மின்கட்டண...