*ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் ராணி ஸ்ரீகுமார் எம்பி வலியுறுத்தல்
சங்கரன்கோவில் : தென்காசியை ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ராணி ஸ்ரீகுமார் எம் பி நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசிய ராணி ஸ்ரீகுமார் எம்.பி., தென்காசி மக்களவைத் தொகுதிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அம்மனுவில் ராணி ஸ்ரீகுமார் எம்.பி. கூறியிருப்பதாவது:
கீழப்புலியூர், பாவூர்சத்திரம், கீழ கடையம் அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி மற்றும் நெல்லை டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடையின் நீளத்தை 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும்.தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்று நிலையம் அமைத்து தென்காசியை ரயில் முனையமாக அறிவிக்க வேண்டும்.கீழப்புலியூரில் இருந்து கடையநல்லூர் செல்லும் வகையில் புறவழிப்பாதை அமைக்க வேண்டும்.
இதனால் தென்காசி ரயில் நிலையத்தில் இன்ஜின் ரிவர்சல் செய்வது தவிர்க்கப்படுவதோடு பயணிகளின் நேரமும் மிச்சப்படும். மேலும் கீழப்புலியூர் நகர்புற நிலையத்தின் பெயரை தென்காசி டவுன் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.தென்காசி செங்கோட்டை இடையே இரட்டைப்பாதை அமைக்க வேண்டும்.
மேலும் தென்காசி- பகவதிபுரம் இடையே ரயிலின் வேகத்தை 110 கிலோமீட்டர் வேகத்திற்கு செல்லும் வகையில் அதிகரிக்க வேண்டும்.06003/04 நெல்லை தாம்பரம் இடையே தென்காசி வழியாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த வாராந்திர ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும். நெல்லையில் காலியாக நிறுத்தப்பட்டிருக்கும் 22629/30 தாதர் ரயிலின் பெட்டிகளை கொண்டு நிரந்தர ரயிலாக இயக்கலாம்.
06029/30 நெல்லை- மேட்டுப்பாளையம் வழி தென்காசி வாராந்திர சிறப்பு ரயிலை நெல்லையில் காலியாக நிறுத்தப்பட்டிருக்கும் 22605/06 புருலியா ரயிலின் பெட்டிகளை கொண்டு வாரம் இருமுறை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் எனவும், 2017,2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் 2018 ஆம் ஆண்டு ரயில் கால அட்டவணையில் இடம் பெற்றும் தற்போது வரை இயக்கப்படாமல் உள்ள 16189/90 தாம்பரம் செங்கோட்டை அந்தியோதயா என்று அழைக்கப்படும் முழுவதும் முன் பதிவற்ற ரயிலை மதுரை, விருத்தாச்சலம் வழியாக மீண்டும் இயக்க வேண்டும்.
இதனால் குருவாயூர்- சென்னை விரைவு ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறைவதோடு மட்டுமன்றி ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள் எனவும்,திருவனந்தபுரம் சென்னை வந்தே பாரத் புதிய ரயில் சேவையை தென்காசி ராஜபாளையம் மதுரை விருத்தாச்சலம் வழியாக இயக்க வேண்டும்.
நெல்லை கொல்லம் இடையே மீட்டர்கேஜ் காலத்தில் இயங்கி வந்த மூன்று ஜோடி ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.07175/76 செகந்திராபாத் கொல்லம் சிறப்பு ரயிலுக்கு கடையநல்லூரில் நின்று செல்ல நிறுத்தம் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நிறுத்தம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் ராணி ஸ்ரீகுமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
The post ரயில் முனையமாக தென்காசியை மாற்ற வேண்டும் appeared first on Dinakaran.