×

விடுதலை-2 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை-2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிடோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை-2 திரைப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாகிறது.

இந்த படத்தை சட்டவிரோதமாக 1,700 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் விடுதலை-2 படம் வெளியாகயுள்ளது.

மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், அதன்மூலம் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, விடுதலை-2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post விடுதலை-2 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Madras High Court ,Vijay Sethupathi ,Soori ,Manju Warrier ,Vetrimaaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...