பல்லாவரம்: பல்லாவரம் அருகே கோயில் நிலத்தை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பிரசித்தி பெற்ற ரெங்கநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளன. அவற்றில் சுமார் 200 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு ஏலம் விடுவதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில், திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயில் வளாகத்தில் ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஏலம் எடுப்பவர்கள் என்று சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்லையில், ஏலம் விடும் நேரத்தில் தாங்கள் சுமார் 4 தலைமுறைகளாக கோயிலுக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், எவ்வித முன்னறிவிப்புமின்றி கோயில் நிர்வாகம் அத்தகைய நிலங்களை எங்களது அனுமதி இல்லாமல் எப்படி ஏலம் விடலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஏற்பட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், திடீரென கோயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தற்காலிகமாக ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற சங்கர் நகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அதையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இச்சம்பவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post கோயில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு விவசாயிகள் போராட்டம்: பல்லாவரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.