×

கலசப்பாக்கம் அருகே வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் திருப்பணி: பக்தர்கள் மகிழ்ச்சி

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் ₹1.52 கோடி மதிப்பீட்டில் திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் பர்வதமலையின் அடிவாரத்தில் மிருகண்டா நதி கரையோரம் சீனந்தல் கிராமத்தில் வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் உள்ளது. மிகப்பழமையான இக்கோயிலில் கடந்த 3 தலைமுறைக்கு முன் திருப்பணி மேற்கொள்ளப்பட்டதாம். அதன்பிறகு முற்றிலும் பராமரிப்பின்றி உள்ளது.

பழமை வாய்ந்த வெள்ளந்தாங்கீஸ்வரர் கற்கோயில் அதன் தொன்மை மாறாமல் திருப்பணிகள் செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ பெசுதி.சரவணன் தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் பரிந்துரைப்படி கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள ₹1.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து திருப்பணி மேற்கொள்ள தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து விரைவில் திருப்பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 தலைமுறைக்கு பிறகு பிரசித்தி பெற்ற வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் திருப்பணி மேற்கொள்ள உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தனுர் மாத உற்சவத்தின்போது உற்சவமூர்த்திகள் பர்வத மலையை கிரிவலம் வருவார். அப்போது வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயிலில் இரவு தங்கி 2வது நாளாக பர்வத மலையை கிரிவலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கலசப்பாக்கம் அருகே வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் திருப்பணி: பக்தர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Vellanthangeeswarar temple ,Kalasappakkam ,Seenandal village ,Mriganda river ,Parvathamalai ,Kalasappakkam, Tiruvannamalai district ,
× RELATED கலசப்பாக்கம் அருகே ஆற்றில்...