×

தர்மபுரி ரயில் நிலையத்தில் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு குறித்து தணிக்கை அதிகாரி ஆய்வு


தர்மபுரி: தர்மபுரி ரயில் நிலையம் மற்றும் வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகுதிகளை, தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு தணிக்கை அதிகாரி கார்த்திக் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தர்மபுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம், கடந்த 1906 ஜனவரி 16ம் தேதி ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் வழியாக, சேலம்-பெங்களூரு இருமார்க்கத்திலும், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் என 25க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 2 ஆயிரம் பயணிகள் பயணிக்கின்றனர். தர்மபுரி ரயில் நிலையத்தில், பல்வேறு வசதிகளை மேம்படுத்த ₹21.34 கோடி நிதியை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தர்மபுரி ரயில் நிலையம் ஒட்டி வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அமைந்துள்ளது.

அடிக்கடி ரயில்வே கேட் பூட்டப்படுவதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த ரயில்வே கேட், நாளொன்றுக்கு 36 முறை திறந்து, மூடப்படுகிறது. அப்போது, தர்மபுரி நகரில் இருந்து வெண்ணாம்பட்டி குடியிருப்பு பகுதி, ஆயுதப்படை குடியுருப்பு பகுதி, குள்ளனூர், தோக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அரசு மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வில் வெண்ணாம்பட்டி ரயில்வே கேட்டில் பாலம் அமைக்கவும், அதனையொட்டி அணுகு சாலை அமைக்கவும் போதிய இடம் இல்லாததாலும், சாலையின் இருபுறமும் நெருக்கமாக குடியிருப்புகள் உள்ளதால், மாற்று வழியில் செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி, பாரதிபுரத்தில் 66 அடி தார்சாலையில் இருந்து வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதான நுழைவு வாயில் வரை, பாலம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்து, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ரயில்வே துறையும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒப்புதல் வழங்கியது. எனினும் பாலம் கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஜூலை 11ம்தேதி நல்லம்பள்ளி அருகே, பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தர்மபுரி – வெண்ணாம்பட்டி சாலையில், புதிய ரயில்வே மேம்பாலம் ₹38 கோடி செலவில் அமைக்கப்படும் என்றார்.

இதற்கான பணிகளில் மும்முரமாக அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனிடையே, கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு தணிக்கை துறை அதிகாரி கார்த்திக் தலைமையில், நேற்று 25க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தர்மபுரி ரயில் நிலையத்திற்கு தனி ரயிலில் வந்து, தர்மபுரி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். ரயில்வே தண்டவாளம், சிக்னல், தகவல் தொடர்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்து பாதுகாப்பு குறித்து தணிக்கை செய்தனர். பின்னர், அங்கிருந்து வெண்ணாம்பட்டி ரயில்வே கேட்டிற்கு நடந்து வந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி ரயில் நிலையத்திற்கு வருடாந்திர ஆய்வுக்காக கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து, தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு தணிக்கை அதிகாரி கார்த்திக் தலைமையில் 25 பேர் வந்தனர். இவர்கள் பிற்பகல் 3.30 மணியில் இருந்து 5 மணி வரை தணிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் ரயில்வே தண்டவாளம், ரயில் இயங்க தேவையான சிக்னல், தகவல் தொடர்பு பரிமாற்ற கருவிகளை தணிக்கை செய்தனர். இதுபோல் வெண்ணாம்பட்டி ரயில்வே கேட்டில், தானியங்கி மூலம் ரயில்வே கேட் இயங்குகிறதா என சோதனை செய்தனர்,’ என்றனர். கடந்த ஜூலை 11ம்தேதி நல்லம்பள்ளி அருகே, பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தர்மபுரி – வெண்ணாம்பட்டி சாலையில், புதிய ரயில்வே மேம்பாலம் ₹38 கோடி செலவில் அமைக்கப்படும் என்றார்.

The post தர்மபுரி ரயில் நிலையத்தில் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு குறித்து தணிக்கை அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri Railway Station ,Dharmapuri ,Vannampatti Railway Gate ,Southwest Railway ,Safety ,Audit Officer ,Kartik ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்