- என்டிஏ
- மத்திய கல்வி அமைச்சர்
- புது தில்லி
- தேசிய சோதனை நிறுவனம்
- என்.டி.ஏ
- தர்மமேந்திர பிரதான்
- NEET
- QUT
- தின மலர்
புதுடெல்லி: ‘உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில் கவனம் செலுத்துவதற்காக, அடுத்த ஆண்டிலிருந்து ஆட்சேர்ப்பு தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தாது’ என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத்தேர்வு, ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளையும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வுகளையும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது.
இதில் கடந்த ஆண்டு நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. க்யூட், நீட் பிஜி உள்ளிட்ட தேர்வுகள் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், என்டிஏவில் தேவையான சீர்த்திருத்தங்கள் செய்ய முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழுவை கடந்த ஜூலையில் ஒன்றிய அரசு அமைத்தது. இக்குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தேசிய தேர்வு முகமையை மறுசீரமைக்கும் பணிகள் 2025ம் ஆண்டில் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் ஆட்சேர்ப்பு தேர்வுகளை என்டிஏ நடத்தாது. உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தும். உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில், எதிர்காலத்தில் நுழைவுத்தேர்வுகள் கணினிமயமாக்கப்படும். நவீன தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்படும். என்டிஏ செயல்பாட்டை மேம்படுத்தவும், எந்த சிறு தவறுகளும் நடக்காததை உறுதி செய்யவும் புதிதாக 10 பதவிகள் உருவாக்கப்படும்’’ என்றார். மேலும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான என்சிஇஆர்டி புத்தங்கள் குறித்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘என்சிஇஆர்டி ஆண்டுதோறும் 5 கோடி பாட புத்தகங்களை அச்சிட்ட நிலையில், இனி 15 கோடி புத்தகங்கள் அச்சிடப்படும். இதன் மூலம் சில வகுப்புகளின் பாடபுத்தகங்கள் விலை அடுத்த ஆண்டு முதல் குறைக்கப்படும். 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான புதுப்பிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் 2026-27ம் கல்வியாண்டில் கிடைக்கும்’’ என்றார்.
* ஆன்லைனில் நீட் தேர்வு?
நீட் நுழைவுத்தேர்வை முழுமையாக ஆன்லைனில் நடத்த உயர்மட்ட குழு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ‘‘சுகாதார அமைச்சகம்தான் நீட் தேர்வின் நிர்வாக அமைச்சகம். எனவே தேர்வை எப்படி நடத்த வேண்டுமென சுகாதார அமைச்சகத்துடன் ஆலோசித்து வருகிறோம். 2 சுற்று பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அடுத்த ஆண்டில் நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவதா அல்லது வழக்கமான ஆப்லைனில் நடத்துவதா என விரைவில் முடிவெடுக்கப்படும்’’ என்றார்.
உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள்
* நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும்.
* டிஜி தேர்வு அமைப்பை உருவாக்கி, நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேர்வு எழுதும் மாணவர்களிடம் பல கட்ட சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
* நுழைவுத்தேர்வுகளை நடத்துவது மட்டுமே என்டிஏவின் முக்கிய பணியாக இருக்க வேண்டும்.
* தேர்வு பாதுகாப்பு, கண்காணிப்பு, செயல்பாடு, தொழில்நுட்பங்கள் என என்டிஏவில் 10 புதிய பதவிகள் உருவாக்கப்பட வேண்டும்.
* அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பான அரசு தேர்வு மையங்களை உருவாக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கென புதிய ஒதுக்கீடு கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
The post உயர்கல்வி நுழைவுத்தேர்வில் மட்டுமே கவனம் ஆட்சேர்ப்பு தேர்வுகளை என்டிஏ நடத்தாது: ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.