×

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ.428 கோடி மதிப்பில் 4வது ரயில் முனையம்: தெற்கு ரயில்வே அனுமதி

சென்னை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து 4வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ரூ.428 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வே துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து தங்குவதால், மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால், புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலும், ஸ்ரீபெரும்புதூர் முதல் பூந்தமல்லி வரையிலும், திருவள்ளூர் முதல் ஆவடி வரையிலும், திருவெற்றியூர் முதல் மீஞ்சூர் வரையிலும் மக்கள் அடர்த்தி மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்த்தால் 2 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருக்கும். தினமும் 2 கோடி பேருக்கான பயண தேவையை பூர்த்தி செய்வது சவாலானது. தற்போது, சென்னையில் புறநகர் ரயில்கள், மாநகர பேருந்து சேவை, மெட்ரோ ரயில் போன்றவை பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, சென்னையில் பொது போக்குவரத்து கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவடங்களில் இருந்து ரயில்களில் சென்னைக்கு வருவோர் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் முனையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வடமாநிலங்கள் மற்றும் மேற்கு மாவட்ட ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகின்றன. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள், ஆந்திரா, தெலங்கானா, டெல்லி (தென் மாவட்டங்கள் வழியாக வரும் ரயில்கள்) ரயில்கள் எழும்பூருக்கு வந்து செல்கின்றன. இதில் எழும்பூர் ரயில் நிலையம் சிறியது என்பதால், அதிகப்படியான ரயில்களை நிறுத்தி வைக்க முடியாத நிலை இருந்தது. இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தை 3வது ரயில் முனையமாக மேம்படுத்தும் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இனி தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் புதிய ரயில்கள் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்தே புறப்படும் என்று அறிவித்தும் விட்டது ரயில்வே. தற்போது நாகர்கோவில் ரயில், அந்தோதியா ரயில் மற்றும் வடமாநில ரயில்கள், கோவை செல்லும் சில சிறப்பு ரயில்கள் தாம்பரம் வரை தான் வருகின்றன. தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்த வசதி இருக்கும் நிலையில், மேற்கு மற்றும் வடமாநில ரயில்கள் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பக்கத்தில் தாம்பரம் போல் இடவசதி உள்ள ரயில் நிலையங்கள் இல்லை.

தற்போதைய நிலையில் சென்ட்ரலுக்கு அடுத்து உள்ள ரயில் நிலையமாக அரக்கோணம் 80 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இதனால் சென்னையில் பெரம்பூரை ஒட்டிய பகுதியில் 4வது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போது சென்னைக்குள் வரும் ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிற்கின்றன. ஆனால் போகும் போது பெரம்பூரில் நிற்காது. அங்கு பெரிய அளவில் இடவசதிகள் இல்லை. இதனால் அங்கு முனையம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லாத நிலையே இருந்து வந்தது.

இந்நிலையில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி இடம் உள்ள காரணத்தால் அங்கு 4வது ரயில் முனையம் அமைக்கலாம் என்று தெற்கு ரயில்வே யோசித்தது. ஆனால் அதனை ரத்து செய்த தெற்கு ரயில்வே சென்னையின் 4வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ரூ.428 கோடி மதிப்பீட்டில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வே துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக சென்னை சென்ட்ரலில் நெரிசலை குறைக்க புதிய முனையம் அமைக்கும் யோசனை கடந்த 2008ம் ஆண்டே முன்வைக்கப்பட்ட போதிலும், இட நெருக்கடி மற்றும் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் காரணமாக நிறைவேறவில்லை. தற்போது பெரம்பூரில் 4வது ரயில் முனையம் அமைக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. 200 ஏக்கர் பரப்பளவில் பெரம்பூர் கேரஜ் மற்றும் லோகோ பணிமனைகள் இருக்கின்றன. இங்குள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு தான் புதிய ரயில் முனையம் அமைக்கப்பட உள்ளது.

ரயில்வே அமைச்கத்தின் இந்த உத்தரவு காரணமாக ஏற்கனவே பெரம்பூரில் மெட்ரோ காரிடர் 3 மற்றும் காரிடர் 5 ஆகியவை அருகிலேயே உள்ளன. இதனால் புதிதாக அமையும் 4வது முனையம் பயணிகளுக்கு ரயில்களை பிடிக்க மிகவும் வசதியாக இருக்கும் என்கிறார்கள்.  பெரம்பபூர் ரயில் முனையம் உருவானால் பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் ரேணிகுண்டா வழியாக வட மாநிலங்கள் செல்லும் ரயில்களுக்கு சேவை வழங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரம்பூர் ரயில் நிலையம், சென்னை சென்டரல் அருகில் இருப்பதால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* நெரிசல் குறையும்
பெரம்பூரில் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து அடியெடுத்து வைத்து வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மேலும் பல்வேறு நிறுவனங்கள் அடியெடுத்து வைக்கும் நிலை தற்போது உருவாகி உள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் பெரம்பூர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ரயில் முனையம் பயன்பாட்டிற்கு வந்தால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பாக்கப்படுகிறது.

The post பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ.428 கோடி மதிப்பில் 4வது ரயில் முனையம்: தெற்கு ரயில்வே அனுமதி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Loco Works ,Southern Railway ,Chennai ,Railway Ministry ,Perambur railway station ,Central ,Egmore ,Tambaram ,Perambur Loco Works… ,Perambur Loco Works ,Dinakaran ,
× RELATED தனிமையில் உள்ளீர்களா… பெண்களிடம் பழக...