சென்னை: உலகளவில் செஸ் என்றால் சென்னை, சென்னை என்றால் செஸ் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் குகேஷின் சாதனை அமைந்திருக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசியதாவது: உலகளவில், செஸ் என்றால், சென்னை சென்னை என்றால், செஸ் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் குகேஷின் சாதனை அமைந்திருக்கின்றது.
குகேஷின் திறமையை அவர்களுடைய பெற்றோர் இளம் வயதிலேயே கண்டறிந்து, அவரை ஊக்குவித்து, இன்றைக்கு இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் அந்த அர்ப்பணிப்புக்கு இந்த நேரத்தில் அனைவரும் கைத்தட்டல் மூலம் நன்றியை சொல்வோம். சென்னை செஸ் மாஸ்டர்ஸ் போட்டியை சென்ற வருடம் நடத்திய போது, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்குச் செல்லும் முன்பே குகேஷுக்கு திராவிட மாடல் அரசு, முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்.
குகேஷோ, எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாத மாபெரும் ஒரு வெற்றியை நமக்காக பெற்று வந்திருக்கின்றார். 11 வயதில் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தனது வெற்றிக் கணக்கைத் துவங்கிய குகேஷ், இன்றைக்கு, 18வது வயதில் சீனியர் சாம்பியன்ஷிப்பிலும் சாதித்துக் காட்டி இருக்கின்றார். அவர் இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்கட்டும். அவருக்கு அரசும், முதல்வரும் என்றென்றும் துணை நிற்பார்கள். கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், வரவேற்கின்றேன்.
தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் மேனுவல் ஆரோன், குகேஷின் கனவை நனவாக்க, தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குகேஷின் பெற்றோர்கள் ரஜினிகாந்த், பத்மா குமாரி, குகேஷின் குடும்பத்தினரையும், நண்பர்களையும், பயிற்சியாளர்களையும் வேலம்மாள் பள்ளியின் மாணவ, மாணவிகளையும் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post சென்னை என்றால் செஸ் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது குகேஷின் சாதனை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.