திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலையேறி 3 நாட்களாக கீழே இறங்க முடியாமல் தவித்த ஆந்திர மாநில பெண்ணை, வனக்காப்பாளர் முதுகில் சுமந்துவந்து பாதுகாப்பாக மீட்டார். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த 13ம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், திருவண்ணாமலை தீபமலையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியானார்கள். இதனால் தீபமலை மீது பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடா ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தபால் துறையில் பணிபுரியும் வெங்கடேஸ்வர ராவ் மனைவி அன்னபூர்ணா(58) என்பவர், பவுர்ணமி கிரிவலத்துக்காக கடந்த 14ம் தேதி திருவண்ணாமலை வந்தார். அன்று மாலை தீபம் ஏற்றுவதை மலை மீது சென்று தரிசனம் செய்ய விரும்பி, பே கோபரம் வீதி வழியாக தடையை மீறி மலையேறி உள்ளார். குறிப்பிட்ட தூரம் சென்றதும் இரவானதால் எந்த திசை வழியாக மலையேறுவது என தெரியாமல் தடுமாற்றம் அடைந்துள்ளார். பதற்றமடைந்த அன்னபூரணி கீழே இறங்க முயற்சித்துள்ளார். வழிதவறி மேற்கு திசை வழியாக இறங்கியதால் அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியில் சிக்கினார். அவர் 2 நாட்களாக வீடு திரும்பாததால் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர்.
அன்னபூரணியின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததால் தொடர்பு கொள்ள இயலவில்லை. உறவினர்களின் தகவலின்படி மலை உச்சியில் பணியில் ஈடுபட்டிருந்த வனகாப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் மலையின் பல்வேறு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மலையின் மேற்கு பகுதியில் தவித்த அன்னபூரணியை வனத்துறையினர் மீட்டனர். பாட்டிலில் கொண்டு சென்ற தண்ணீரை மட்டுமே குடித்து, 3 நாட்களாக மலையில் தவித்த அவர், பலவீனமாக இருந்தார். எனவே, வனக்காப்பாளர் தனது முதுகில் சுமந்தபடி அவரை நள்ளிரவு கீழே பத்திரமாக கொண்டு வந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டார்.
The post திருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலை ஏறிய ஆந்திர பெண் 3 நாட்களாக சிக்கித் தவிப்பு: வனக்காப்பாளர் முதுகில் சுமந்து வந்து காப்பாற்றினார் appeared first on Dinakaran.