தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ₹1.10 கோடி செலவில் 4 புதிய லாரிகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த லாரிகளை கொடியசைத்து மேயர் இயக்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் உள்ள 70 வார்டுகளில் பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்து அனைவருக்கும் குடிநீர் வழங்கும் முயற்சியில் தாம்பரம் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
அதன்படி ஒவ்வொரு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் குடிநீர் வழங்கும் வகையில் குழாய்கள், நீர்த்தேக்க தொட்டிகள், தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில், குடிநீர் வழங்குவதற்கு போதுமான லாரிகள் தாம்பரம் மாநகராட்சியில் இல்லாததால் புதிய லாரிகள் வாங்க திட்டமிடப்பட்டது. அதன்படி ₹1.10 கோடி மதிப்பீட்டில் தலா 9000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 தண்ணீர் லாரிகள் வாங்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் லாரிகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கிவைக்கும் நிகழ்ச்சி தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் கலந்து கொண்டு, புதிய தண்ணீர் லாரிகளை கொடியசைத்து இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ச.ஜெயபிரதீப், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்க ரூ.1.10 கோடியில் 4 புதிய லாரிகள்: தாம்பரம் மேயர் இயக்கி வைத்தார் appeared first on Dinakaran.