×

அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை; உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அதிகரிக்கப்படுமா?.. கோவை தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரிக்க விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறையினர் வலியுறுத்தி உள்ளனர். கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கு 29 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல சிங்கப்பூருக்கு 2 விமானங்களும், ஷார்ஜாவிற்கு வாரத்திற்கு 5 முறையும், அபுதாபிக்கு வாரத்திற்கு 3 முறையும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை விமான நிலையத்தில் இருந்து தற்போது தினமும் உள்நாட்டு விமானங்களில் மொத்தம் 10,500 பேரும், வெளிநாட்டு விமானங்களில் மொத்தம் 1,530 பேரும் பயணிக்கும் வசதிகள் உள்ளன.

இதனிடையே வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரிக்கும் வகையில் விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் பயணிகளின் வசதிகளுக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் கோவை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அக்கூட்டமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறியதாவது, ‘‘கோவை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கடந்த 15 நாட்களில் 1.50 லட்சம் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இம்மாதத்தில் 3 லட்சம் பயணிகளை கையாளுதல் என்ற இலக்கை கோவை விமான நிலையம் அடைய வாய்ப்பு உள்ளது. தொழில் நகரமான கோவையில் உள்ள விமான நிலைய முனையத்தை மேம்படுத்த விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர் இந்தியா நிறுவனம் டெல்லிக்கு காலை நேர விமான சேவையை துவக்க வேண்டும். இண்டிகோ நிறுவனம் புனேவிற்கு கூடுதல் விமானத்தை இயக்க வேண்டும். அகமதாபாத், கோல்கத்தா ஆகிய பகுதிகளுக்கு புதிய விமான சேவைகளை துவக்க வேண்டும்.

கோவை விமான நிலையத்தில் இருந்து தோகா, கொழும்பு, பேங்காக், துபாய், கோலம்பூர் ஆகிய பகுதிகளுக்கு வெளிநாட்டு விமான சேவையை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விமான நிலைய ஆணையம் மற்றும் விமான நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். விமான நிலையம் என்பது முக்கியமான உள்கட்டமைப்பு வசதியாகும். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு நிலத்தை கையகப்படுத்தி தந்துள்ளது. விமான நிலைய ஆணையம் உரிய அனுமதிகளை விரைந்து பெற்று விரிவாக்க பணிகளை துவக்க வேண்டும்.

அதனை செய்தால் பல வெளிநாடுகளில் இருந்து புதிய விமானங்கள் வந்து செல்லும். முதலீடுகள் அதிகரித்து தொழில் வாய்ப்புகள் பெருகும். மக்கள் விரைவாக பல பகுதிகளுக்கும் சென்று வர முடியும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை; உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அதிகரிக்கப்படுமா?.. கோவை தொழில் துறையினர் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Airports Authority ,Coimbatore airport ,Chennai ,Mumbai ,Bengaluru ,Dinakaran ,
× RELATED காந்தி, நேதாஜிக்கு பிறகு மிகப்பெரிய...