×

இந்த ஆண்டு 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு: நீர்மட்டம் 118 அடியை தாண்டியது

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை தாண்டியுள்ள நிலையில், இந்த ஆண்டில் 3வது முறையாக அணை நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த ஆண்டில் கடந்த ஜூலை 30ம் தேதி, முதல் முறையாக முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. தொடர்ந்து ஆகஸ்ட் 12ம் தேதி இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. நீர் திறப்பு அதிகரிப்பின் காரணமாக ஆகஸ்ட் 20ம் தேதி நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. மழை காரணமாக, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. அதேசமயம் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 7,148 கனஅடியாக இருந்தது. டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக, அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 1300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து கடந்த 9ம் தேதி 116.37 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, நேற்று காலை 118.21 அடியானது. நீர் இருப்பு 90.64 டிஎம்சியாக உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இந்தாண்டில் மூன்றாவது முறையாக, மேட்டூர் அணை முழுமையாக நிரம்பும் வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post இந்த ஆண்டு 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு: நீர்மட்டம் 118 அடியை தாண்டியது appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Mettur ,Salem ,Namakkal ,Trichy ,Pudukkottai ,Thanjavur ,Thiruvarur ,Ariyalur ,Nagapattinam… ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது..!!