×

உலக தரத்தில் மேம்படுத்தும் வகையில் மெரினாவில் நீல கொடி சான்றிதழ் திட்ட பணி விரைவில் தொடக்கம்: டெண்டர் கோரியது மாநகராட்சி

சென்னை: சென்னை மெரினா கடற்ரை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் 2வது நீளமான கடற்கரை. வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. வரை உள்ளது. 1880ம் ஆண்டுகளில் ஆளுநர் மவுண்ட் ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டப் என்பவரால் இந்த கடற்கரை முதன்முறையாக புதுப்பிக்கப்பட்டது. சென்னை வரும் சுற்றுலா பயணிகள் மெரினா கடற்கரைக்கு தவறாது வருவது வழக்கம். மெரினா கடற்கரை பேருந்துகள், டாக்சிகள், கார் போன்ற வாகனங்கள் மூலம் எளிதில் செல்லும் வகையில் நகர் பகுதியில் உள்ளது. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் போது கடற்கரை பகுதியில் நடைபயிற்சி செல்லும் எல்லாரும் ஒரு இனிமையான அனுபவத்தை உணருகின்றனர்.

மாலையில், கடற்கரையில் கலைப்பொருட்கள், கைவினை, இன நகை மற்றும் உணவு பொருட்கள் விற்பனை களைகட்டும். குழந்தைகள் விளையாட சிறந்த இடமாக உள்ளது. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக இந்த கடற்கரை விளங்குவதால், திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-22ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கடற்கரைகளின் தரம், பாதுகாப்பு, தகவல் மற்றும் பாதுகாப்புச் சேவையை உயர்த்த, மாசுபாட்டை குறைக்க அடுத்த 5 ஆண்டுகளில் 10 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் அழகிய, சுத்தமான கடற்கரைகளை தேர்வு செய்து இந்த நீலக்கொடி தரச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த, சுற்றுச்சூழல் மிக்க, கடல்சார் சூழலியைப் பேணிக் காக்கும் அழகிய கடற்கரைகளை தேர்வு செய்து டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் சுற்றுச்சூழல் மேலாண்மை, நீரின் தரம், நீல நிறம், பாதுகாப்பு, குளிக்க தகுந்த சுகாதாரமான நீர் உள்ளிட்ட 33 அம்சங்களை கொண்டு வழங்கி வருகிறது. இந்த சான்றிதழ் பெற்றால் அந்த கடற்கரை உலகில் அழகான கடற்கரை மற்றும் சுத்தமான கடற்கரை என்பது பொருள்படும். அதன் அடிப்படையில், இந்தியாவில் 10 கடற்கரைகளுக்கு இந்த நீலக் கொடி தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த பட்டியலில் சென்னை மெரினா கடற்கரையும் இணையவுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரை, புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரையும் இந்த நீலக்கொடி தரச்சான்றிதழை ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி பார்த்தால், தற்போது தமிழகத்தின் ஒரே நீலக்கொடி கடற்கரையாக கோவளம் கடற்கரை மட்டுமே உள்ளது. இந்த வரிசையில், மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி பெறும் வகையில், கட்டுமானங்களை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி கடந்த 2 வாரத்திற்கு முன்னர் டெண்டர் கோரியது.

நீலக்கொடி கடற்கரைகள் திட்டத்தின்படி, கடற்கரை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மெரினா முதல் சாந்தோம் கடற்கரை வரையிலான பகுதியில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளதால் இந்த திட்டத்தின் கீழ் இந்த பகுதிகளில் பாரம்பரியம் சாா்ந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடற்கரைப் பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரிய தாவரங்கள் குறித்தான ஆய்வு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த பணிகள் முடிந்தபின்னர் சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டி.எம்.சுப்ரமணியம் & கோ என்ற தனியார் நிறுவனத்திடம் டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், கடல்சார் அமைப்பிடம் இருந்து அனுமதி கிடைத்ததும், இந்த நிறுவனம் முதற்கட்ட பணிகளை அடுத்த 15 நாட்களுக்குள் தொடங்கவுள்ளது. இறுதி கட்ட பணிகள் அனைத்தும் அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

* முக்கிய அம்சங்கள்
சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு, எல்இடி விளக்கு, தகவல் பலகை, மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், ஆண், பெண் பொது கழிவறை, ஓய்வறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், முதலுதவி சாதனங்கள், அவசர கால பாதுகாப்பு கருவி, நிழற்குடை, சிசிடிவி கேமராக்கள், இருக்கைகள் உள்ளிட்ட 17 வசதிகள் செய்யப்படுகின்றன

* சுற்றுச்சூழல் சின்னம்
சுற்றுலா மேம்பாட்டிற்கு அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கிறது. இது உள்ளுர் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. நிலத்தின் தன்மை மேம்படுகிறது. கடற்கரை இடங்களை பாதுகாக்க ஊக்குவிக்கப்படுகிறது. மக்கள் ஆரோக்கிய வாழ்வை வளப்படுத்துகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்பட்டு, மக்களை மகிழ்விக்க உதவுகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தகுந்த இடங்களை சந்தைப்படுத்த உதவுகிறது. நீலக் கொடி என்பது சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறைகளை ஒருங்கிணைக்க உதவும் ஒரு மதிப்புமிக்க சுற்றுச்சூழல் சின்னமாக வளர்ந்துள்ளது.

இந்தியாவின் நீலக்கொடி கடற்கரைகள்
* கோல்டன் பீச் ஒடிசா,
* சிவராஜ்பூர் கடற்கரை குஜராத்,
* கப்பாட் கடற்கரை கேரளா,
* கோக்லா கடற்கரை டையூ,
* ராதாநகர் கடற்கரை அந்தமான் மற்றும் நிக்கோபார்,
* சர்கோடு கடற்கரை கர்நாடகா,
* படுபித்ரி கடற்கரை கர்நாடகா,
* ருஷிகொண்டா கடற்கரை ஆந்திரப் பிரதேசம்,
* கோவளம் கடற்கரை தமிழ்நாடு,
* ஈடன் கடற்கரை புதுச்சேரி.

The post உலக தரத்தில் மேம்படுத்தும் வகையில் மெரினாவில் நீல கொடி சான்றிதழ் திட்ட பணி விரைவில் தொடக்கம்: டெண்டர் கோரியது மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Marina beach ,India ,Fort St. George ,Besant Nagar ,Governor Mount ,Dinakaran ,
× RELATED விமான தாமதம், ரத்து ஆவதற்கு...