கிங்ஸ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில் வங்கதேசம், 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்கதேசம் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டி20 போட்டி கிங்ஸ்டவுனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய தான்ஸிட் ஹசன் 6, சவும்யா சர்க்கார் 43 ரன் எடுத்து அவுட்டாகினர். அதன் பின் வந்த கேப்டன் லிட்டன் தாஸ் 0 ரன்னிலும் ஆபிப் ஹொசேன் 8 ரன்னிலும் வீழ்ந்து அதிர்ச்சி அளித்தனர். 20 ஓவர் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீசின் அகீல் ஹொசேன், ஒபேட் மெக்காய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின், 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. வங்கதேச பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் அவுட்டாகினர். இதனால், 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அந்த அணியின் கேப்டன் ரோமேன் பாவல் மட்டும் சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 60 ரன் குவித்தார். வங்கதேச பந்து வீச்சாளர்கள் மஹேதி ஹசன் 4, ஹசன் மஹ்மூத் 2, தஸ்கின் அஹமது 2 விக்கெட் வீழ்த்தினர். வங்கதேசத்தின் மஹேதி ஹசன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
The post வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20: 7 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி appeared first on Dinakaran.