புதுடெல்லி: நடப்பு 2024, இந்திய கால் பந்து அணிக்கு, வெற்றிகள் ஏதுமின்றி, கால் பந்து ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிய மோசமான ஆண்டாக விடைபெறுகிறது. ஆண்டின் துவக்கத்தில் நடத்தப்பட்ட ஏஎப்சி ஆசிய கோப்பைக்கான கால் பந்து போட்டியில் ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக ஆடிய இந்திய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது துரதிருஷ்டமே. அதே சமயம் இந்தியா வாங்கிய கோல்களின் எண்ணிக்கை 6.
ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சில புது முகங்கள் நம்பிக்கை அளித்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. பின்னர் நடந்த ஃபிபா உலக கோப்பைக்கான தகுதிப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற முடியாமல் போனது. அதனால் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக் அகற்றப்பட்டு, புதிய தலைமை பயிற்சியாளராக மனோலோ மார்கஸ் பதவியேற்றார்.
அவர் தலைமையில் நான்கு போட்டிகளில் இந்திய அணி பங்கேற்றது.
இன்டர்கான்டினென்டல் கோப்பைக்கான முதல் போட்டியில் மாலத்தீவுகளை எதிர்கொண்ட இந்தியா டிரா செய்தது. அதன் பின் சிரியாவுடன் நடந்த போட்டியில் 0-3 கோல் கணக்கில் தோற்றது. 2024ல் இந்திய கால்பந்து அணி 11 போட்டிகளில் மோதியுள்ளது. அவற்றில் 6ல் தோல்வி, 5ல் டிரா. ஒன்றில் கூட வெற்றி கிட்டவில்லை. இந்திய அணி அடித்த கோல்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வெறும் 4 மட்டுமே. அதே சமயம், 15 கோல்களை நம் அணி வாங்கி உள்ளது. வரும் 2025லாவது இந்திய கால்பந்து அணி வெற்றி வாகை சூடுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
The post 6 தோல்வியுடன் விடைபெறும் 2024: இந்தியர் இதயங்களை நொறுக்கிய கால்பந்து appeared first on Dinakaran.