×

உடன்குடி, கோவில்பட்டி பகுதியில் தை பொங்கலுக்கு தயாராகும் பனங்கிழங்கு-25 கிழங்கு ரூ.100க்கு விற்பனை

உடன்குடி :  தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு இன்னும் 5 நாளே உள்ளதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வர்ணம் பூசி சுத்தம் செய்து, பயன்படாத பழைய பொருட்களை அப்புறப்படுத்தி புதிய பொருட்களை வாங்கி அலங்கரித்து வருகின்றனர். விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்கதிர்களுக்கு பொங்கலிட்டு வழிபட்டு அறுவடை பணியை துவங்குவர். மேலும் தைப்பொங்கலன்று வீடுகளுக்கு முன்பு பொங்கலிட்டு, மஞ்சள் குலை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை வைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுவர்.தைப்பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பும், பனங்கிழங்கிற்கும் தனி இடம் உண்டு. கற்பக விருட்சம் என்றழைக்கப்படும் பனைமரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்தும் பயன் தரக்கூடியது. பனங்கிழங்கு மருத்துவ குணமுள்ள பொருளாகும். ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் விவசாயிகள் பனம் பழங்களை சேகரித்து மண்ணில் புதைத்து வைப்பார்கள்.  3 மாதங்களுக்கு பிறகு கிழங்குகள்  அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. பனை விதையில் இருந்து கிடைக்கும் தவுன் மக்களால் பெரிதும் விரும்பப்படும்  உணவுப்பொருள். பொங்கல் சீர்வரிசை பொருட்களுள் பனங்கிழங்கும் பங்கு வகிக்கிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளிலும், கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி, முத்துலாபுரம், அயன்வடமலாபுரம், வேம்பார், விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் லட்சக்கணக்கான பனைமரங்கள் உள்ளன. இதில் காயாமொழி, தேரிக்குடியிருப்பு,  எள்ளுவிளை உள்ளிட்ட தேரிக்காடு மண்ணில் விளையும் பனங்கிழங்குகளுக்கு தனிசுவையும், மணமும் உண்டு. இங்கு விளையும் பனங்கிழக்குகள் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.பொங்கலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் பனங்கிழங்குகளை விவசாயிகள் தோண்டி எடுத்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். மார்க்கெட்டில் 25 கிழங்கு ரூ.75 முதல் 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக பனைத்தொழில் நலிவடைந்து வருகிறது. பனைத்தொழில் புரிவோர் போதிய வருமானமின்றி பல குடும்பங்கள் மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிட்டன. எனவே பனைத்தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக 21 வகையான பொருட்கள் தருவதுடன், குடும்ப அட்டைக்கு 25 பனங்கிழங்குகள் வழங்க வேண்டும். இதனால் பனைத்தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் உயரும். எனவே வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்று கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்….

The post உடன்குடி, கோவில்பட்டி பகுதியில் தை பொங்கலுக்கு தயாராகும் பனங்கிழங்கு-25 கிழங்கு ரூ.100க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Ebenkudi ,Ebengudi ,
× RELATED இன்னொரு முட்டை கொடுக்க மறுத்த சமையல்...