×

கண்மாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீரால் நீரில் மூழ்கிய வாழைப்பயிர்கள்

மதுரை: தொடர்மழையால் நிரம்பிய கண்மாய்களில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெளியேறி மதுரை நகரின் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததுடன், வாழைத்தோட்டங்களுக்குள்ளும் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பெய்த தொடர் மழையால் மாடக்குளம் கண்மாய், அச்சம்பத்து, விராட்டிப்பத்து கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி வருகின்றன. கிருதுமால் வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்லும் நிலையில், ஆங்காங்கே குப்பைகள் அடைத்து கால்வாயில் செல்லும் தண்ணீர் மதுரையில் பொன்மேனி தானத்தவம்புதூர் பகுதியில் உள்ள விவசாய நிலப்பகுதிகளுக்குள் புகுந்து 60 ஏக்கரில் நடப்பட்டிருந்த வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதில் 35 ஏக்கர் வாழை விவசாய நிலத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் நிரம்பி இருப்பதால் வாழை பயிர்கள் அழுகிவிடும் ஆபத்து இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தானத்தவம்புதூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். அச்சம்பத்து கண்மாய் முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில் உபரிநீர் செல்லும் கால்வாய்களில் ஆகாயத்தாமரை செடிகள், குப்பைகள் அடைப்பால் கண்மாய் தண்ணீர் வெளியேறி மதுரை மாநகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட ராகவேந்திரா நகர், பொன்மேனி பகுதிகளின் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

தெருக்களிலும் தொடர்ந்து கண்மாய் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் வரத்து கால்வாய்களில் உள்ள அடைப்புகள் சரி செய்யும் பணிகளை மாநகராட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியினர் அடைப்பு உள்ள பகுதிகளை தூர்வாரி, தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத வகையில் சரி செய்து வருகின்றனர்.

 

The post கண்மாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீரால் நீரில் மூழ்கிய வாழைப்பயிர்கள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madakulam Kannamai ,Ahambattu ,Viratipattu Kannamayai ,Madura ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு