×

முக்காணி தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்: வெயில் அடிக்க துவங்கியதால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்

ஆறுமுகநேரி: தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்ததுடன் நேற்று காலை முதல் வழக்கம்போல் வெயில் அடிக்கத் துவங்கியது. இதனால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினர். இதே போல் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் தடை செய்யப்பட்டிருந்த போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் துவங்கியதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் முக்காணி தாமிரபரணி ஆற்றில் பழைய பாலத்தை வெள்ளநீர் தொட்டுக்கொண்டு ஆர்ப்பரித்து சென்றது. இதையடுத்து கடந்த 13ம் தேதி இரவு 11 மணி முதல் முக்காணி ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் அனைத்து வாகனங்களும் முக்காணி ரவுண்டானாவில் இருந்து ஏரல், சிவகளை, பேட்மாநகரம் ஆழ்வார்திருநகரி, குரும்பூர் வழியாக திருச்செந்தூருக்கு திருப்பி விடப்பட்டன.

மேலும் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் ஆறுமுகநேரி சாகுபுரம் விலக்கிலிருந்து குரும்பூர் வழியாக ஆழ்வார்திருநகரில் பேட்மாநகரம், ஏரல், முக்காணி வழியாக தூத்துக்குடிக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. இதனால் பல கி.மீ. தொலைவு சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முக்காணி தாமிரபரணி ஆற்றில் பழைய பாலத்தில் தொட்டு ஆர்ப்பரித்துச் சென்ற வெள்ளநீர் பாலத்திற்கு கீழ் குறைய ஆரம்பித்தது. இதையடுத்து காலை 8 மணி முதல் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை இணைப்பு பாலமாக உள்ள முக்காணி தாமிரபரணி ஆற்று பழைய பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

இதனால் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. இதனைத்தொடர்ந்து வழக்கம்போல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. மேலும் கடந்த 3 நாட்களாக ஓய்வெடுத்த கதிரவன், நேற்று காலை முதல் வழக்கம்போல் தனது கடமையைத் துவக்கியதால் வெயில் சுள்ளென்று அடிக்கத் துவங்கியது. இதனால் மக்களும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினர். இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை வெள்ளத்தால் முக்காணி தாமிரபரணி ஆற்றின் புதிய உயர்நிலைப் பாலத்தின் நடுப்பகுதி 2 அடிக்கு ஆற்றுக்குள் இறங்கி சேதமடைந்தது. ஓராண்டாகியும் புதிதாக உயர்நிலை பாலம் சீரமைப்பு பணி தற்போது வரை துவங்கப்படவே இல்லை.

வெள்ள காலங்களில் முக்காணி தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்தில் தண்ணீர் மூழ்கடித்துச் செல்வது வழக்கமாக இருந்தது. இந்த காலகட்டங்களில் போக்குவரத்து தடையின்றி நடைபெறவும் மற்ற காலங்களில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் புதிய பாலம் கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது. ஆனால் புதிய பாலம் சேதமடைந்த நிலையில் தற்போது பெய்த கனமழை வெள்ளத்தில் மேலும் நடுப்பகுதி ஆற்றுக்குள் இறங்கி சேதமடைந்துள்ளது. இதுவரை புதிய பாலத்தை சீரமைக்காததால் போக்குவரத்து முற்றிலும் தடை ஏற்பட்டது.

மேலும் வெள்ள காலங்களில் அவசரத்திற்காக தூத்துக்குடி மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே முக்காணி தாமிரபரணி ஆற்றின் புதிய உயர்மட்ட பாலத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்கவும், பழைய பாலத்தை செப்பனிட்டு தடுப்பு கம்பிகளை உறுதியாக அமைத்து தூத்துக்குடி – திருச்செந்தூர் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டும் என திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்காணி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் ஆறுமுகநேரி – ஆத்தூர் இடையே உள்ள தண்ணீர் பந்தலில் உள்ள தரைமட்ட பாலத்தில் மழைக்காலங்களில் வெள்ளநீர் பாலத்தை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனாலும் மழைக்காலங்களில் அவ்வப்போது போக்குவரத்து இந்த வழியில் தடைப்பட்டு வருகிறது. எனவே கடந்த பல ஆண்டுகளாக இந்த பாலத்தை உயர் மட்டமாக கட்டுவதற்கு சமூக ஆர்வலர்களும், இப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த தரைமட்ட பாலத்தையும் உயர் மட்டமாக அமைத்து தூத்துக்குடி – திருச்செந்தூர் முக்கிய சாலையாக உள்ள ஆத்தூர் – ஆறுமுகநேரி இணைப்பு வழியில் தடை இன்றி போக்குவரத்து நடைபெற வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

The post முக்காணி தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்: வெயில் அடிக்க துவங்கியதால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள் appeared first on Dinakaran.

Tags : Thamirabarani river ,Thoothukudi-Thiruchendur road ,Arumuganeri ,Thoothukudi district ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம்