சென்னை: சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு கடந்த வாரம் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் நேற்று நள்ளிரவு முதல் கரைக்கு திரும்பின. பெரிய வகை மற்றும் சிறிய வகை இறால் மீன்கள் ஏராளமானவை மீனவர்களுக்கு கிடைத்திருந்தது. மீன் ஏலம் விடும் இடத்தில் வியாபாரிகளும் சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் மிகக் குறைந்த அளவே வந்திருந்ததால் விசைப்படகு உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சில்லரை விலையிலும் மீன் விலை மிக குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது. சிறிய வகை இறால் ரூபாய் 150 லிருந்து 250 வரை விலை போனது. வஞ்சிரம் ஒரு கிலோ 700 ரூபாய்க்கும் சிறிய ரக மீன்கள் மிகக் குறைந்த விலைக்கும் விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அதை வாங்கிச் சென்றனர்.
விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீன் விலை சரியாக கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் வரும். ஆனால் நேற்று கூட்டம் குறைந்திருந்தது. இதனால் விலை குறைவாக மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். கார்த்திகை மாதம் என்பதால் மீன் விலை கடந்த இரண்டு வாரமாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
The post கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காசிமேட்டில் மீன்கள் விலை குறைவு appeared first on Dinakaran.