×

பாலாறு தென்பெண்ணை இணைப்பு திட்டம் விரைவுபடுத்தப்படுமா?

கர்நாடகா, சிக்கமகளூரூ நந்தி மலையில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, ஓசூர் வழியாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை கடந்து கடலூர் அருகே விரிகுடாவில் கலக்கிறது. இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையாகும். சாத்தனூர் அணைக்கு முன்பாக தென்பெண்ணையில் ஒவ்வொரு பருவமழை சீசனின் போதும் வீணாகும் 3.5 டிஎம்சி தண்ணீரை பாலாற்றுக்கு திருப்பிவிட்டு பாலாற்றின் நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வடமாவட்ட மக்கள் மத்தியில் எழுந்து வந்தது.

அதற்கேற்ப தேசிய நதிநீர் இணைப்புக்கு முன்பாக மாநில நதிகளை இணைப்பதில் அந்தந்த மாநிலங்கள் முனைப்பு காட்டின. அதன்படி, 2008-09ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மத்திய நீர்வள ஆதார அமைப்பின் அனுமதியுடன் ₹258 கோடியில் பாலாறு- தென்பெண்ணை- செய்யாறு இணைப்புத்திட்டம் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் 2010ம் ஆண்டு தொடங்கின. இதற்காக 59.50 கி.மீ தூரத்துக்கு நீர்வழித்தடங்களை மத்திய நீர்வள ஆதார அமைப்பின் பொறியாளர் சித்திக் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். முதலில் மேற்கில் சந்தூர் என்ற கிராமம் வழியாக முதல் இணைப்புக்கான வழித்தடத்தில் கற்களை நட்டனர். பின்னர் கிழக்கில் 5 கி.மீ தூரம் குறைவு, நீர்வழித்தடம் சரிவு காரணங்களால் அத்திசையிலும் கற்களை நட்டனர். இதை எதிர்த்து ஒரு பிரிவு விவசாய சங்கம் ஐகோர்ட்டில் ரிட் மனுத்தாக்கல் செய்தது. இப்பிரச்னையால் பொறியாளர் சித்திக், பாலாறு-தென்பெண்ணை இணைப்புத்திட்ட பைலை கிடப்பில் போட்டார்.

அதன்பிறகு இத்திட்டம் தொடர்பாக அப்போதைய வேலூர் எம்பி அப்துல்ரகுமான் எழுதிய கடிதத்துக்கு, மத்திய நீர்வள ஆதார அமைப்பு, திட்ட அனுமதி கடிதத்தின் நகலை பதிலாக அனுப்பியது. அதில் பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டத்தை 2015ம் ஆண்டுக்குள் சொந்த நிதி ஆதாரத்தில் செய்துகொள்ளும்படி மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் தமிழகத்தில் பாலாறு-தென்பெண்ணை, காவேரி-குண்டாறு உட்பட மாநில ஆறுகள் இணைப்புத்திட்டம் மாநில அரசின் நிதி ஆதாரத்திலேயே நிறைவேற்றப்படும் என்று 2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, திட்ட அனுமதி வழங்கப்பட்ட பாலாறு-தென்பெண்ணை திட்டத்துக்குத்தான் மீண்டும் திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக 2019ல் ₹70 லட்சத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார் அப்போதைய முதல்வர் பழனிசாமி. இதற்கு விவசாய சங்கங்கள் அதிர்ச்சி கலந்த எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், பாலாறு-தென்பெண்ணை இணைப்புக்காக ₹648 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியது. அதற்கேற்றார் போல் பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டத்துக்கான தனி அலுவலகம் வேலூரில் திறக்கப்பட்டு தனி செயற்பொறியாளரும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் மாநில அரசு ஒன்றிய நீர்வள ஆதார அமைப்புடன் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கியது. ஆனால் என்ன காரணத்தாலோ இத்திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றுவதில் அப்போதைய அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை. இதனால் நிதியும் ஒதுக்கப்படவில்லை. மாறாக தனது கொங்கு பகுதியில் நீண்டநாளைய கோரிக்கையான அத்திக்கடவு-அவநாசி திட்டத்தை கையில் எடுத்த எடப்பாடி, இங்கிருந்த செயற்பொறியாளரை அத்திட்டத்துக்கு மாற்றினார். அதோடு பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டமும் காற்றோடு கலந்தது. இந்த நிலையில்தான், திமுக அரசு பொறுப்பேற்றதும், நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன், பாலாறு-தென்பெண்ணை இணைப்புத்திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று அறிவித்தார். இதற்காக வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் அறிவிப்பால் மூன்று மாவட்ட விவசாயிகள் மத்தியிலும் இதுதொடர்பான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இத்திட்டம் முழுமையாக நிறைவேறும்பட்சத்தில் பருவமழை சீசனில் தென்பெண்ணையில் வீணாகும் 3 டிஎம்சி தண்ணீர் பாலாற்றுக்கு 54 கி.மீ தூரம் அமைக்கப்படும் கால்வாய் மூலம் திருப்பிவிடப்படும். இந்த தண்ணீர் கிருஷ்ணகிரி அணையில் இருந்து நெடுங்கல் அணைக்கு வரும். அங்கிருந்து நாட்றம்பள்ளி கொட்டாறு வழியாக பாலாற்றுக்கு விடப்படும். இதில் தற்போது சிறிய மாற்றத்துடன் காக்கங்கரை ஏரியில் தண்ணீரை திருப்பி பாலாற்றுக்கு விடுவதாக திட்டம் உள்ளதாக நீர்வளப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் 9 ஆயிரத்து 850 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும். 1.5 லட்சம் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும். அதோடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளும் பலனடையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பாலாறு தென்பெண்ணை இணைப்பு திட்டம் விரைவுபடுத்தப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Thenpennai River ,Nandi Hills ,Chikkamagaluru, Karnataka ,Hosur ,Krishnagiri ,Dharmapuri ,Tiruvannamalai ,Kallakurichi ,Cuddalore ,Sathanur Dam ,Tiruvannamalai district ,Sathanur Dam… ,
× RELATED திருக்கோவிலூர் பகுதியில் வெள்ளத்தால்...