புழல்: சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று நேற்றிரவு சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம நபர் மிரட்டல் விடுத்து, தொடர்பை துண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து, புழல் மத்திய சிறை வளாகத்தில் நேற்றிரவு முதல் நள்ளிரவு வரை சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் புழல் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண் மற்றும் சிக்னல் டவரை வைத்து போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர். போலீசாரின் விசாரணையில், செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் மதுரையில் பதுங்கியிருப்பதாக உறுதியானது.
இதைத் தொடர்ந்து, மதுரையில் தங்கம் என்ற நபரை போலீசார் கைது செய்து, கரிமேடு காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், புழல் மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்தது. எனினும், இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post புழல் மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.