×

மரவள்ளிக்கிழங்கின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு உணவுப் பொருட்களும், ஒரு வகையான மருத்துவ குணங்களைக் கொண்டு இருக்கின்றன. காய்கறிகள், கீரைகளைப் போலவே கிழங்கு வகைகளிலும் வைட்டமின்களும், தாது பொருட்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. அவ்வகையில், மரவள்ளிக் கிழங்கில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. அவற்றின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.

மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும். ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.

மரவள்ளிக்கிழங்கில் உள்ள இரும்பு, தாமிரம் ரத்த சோகையை கட்டுப்படுத்தும். அதிக நார்சத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாக உதவும். இதில் இடம் பெற்றுள்ள புரதசத்தும், வைட்டமின் கேவும், எலும்பு மற்றும் திசுக்கள் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது.

இதன் மாவுப் பொருளில் இருந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. இது கஞ்சி, பாயசம் செய்ய உதவும். இக்கஞ்சி வயிற்றுப் புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இக்கிழங்கிலிருந்து சிப்ஸ், முறுக்குகள் போன்ற சிற்றுண்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பல்வேறு துறைகளில், குறிப்பாக பருத்தி மற்றும் சணல் ஆடைகள் உற்பத்தி, காகிதம், நாட்காட்டி தயாரிப்பு, கோந்து மற்றும் கெட்டியான அட்டைகள் தயாரிக்கும் தொழிலில் முக்கியமான மூலப்பொருளாக பயன்படுகிறது.

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்டபின்போ அன்றைய நாளில் இஞ்சி அல்லது சுக்கு சாப்பிடக்கூடாது. மரவள்ளிக்கிழங்கின் தன்மையால், அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு.

செரிமான மண்டலம்

எண்ணெய் நிறைந்த மற்றும் பாஸ்ட் புட் உணவுகள் சுவைப்பதற்கு நன்றாக இருந்தாலும், உடலில் செரிமானத்துக்கு ஏற்றவையாக இருப்பதில்லை. இதனால், அன்றாடம் சாப்பிடும் இதுபோன்ற உணவுகள் செரிமான மண்டலத்தை சீர்குலைத்து, உடல் உபாதைகள் ஏற்பட காரணமாக அமைகின்றன. உடலில் தேங்கும் கழிவுகளால் நாளடைவில் குடல்சார்ந்த பல்வேறு பிரச்னைகள் உருவாகவும் காரணமாக இருக்கின்றன. மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் இதுபோன்ற கழிவுகளையும் வெளியேற்ற உதவுகின்றன. செரிமான மண்டலத்தை சீராக்கி, மென்மையான குடல் இயக்கத்துக்கு வழிவகுக்கிறது.

கண் பார்வை

இன்றைய சூழலில் கண் பார்வை பிரச்னை என்பது சிறியவர், பெரியவர் என்றில்லாமல் அனைத்து வயதினருமே எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், செல்போன், கணினி முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், கண்களில் வறட்சி ஏற்பட்டு பார்வைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால், வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது பார்வைக் குறைபாடு பிரச்னைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். அந்தவகையில், மரவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் போலேட் (folate) மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆன்டிஆக்சிடன்டுகளும் மரவள்ளிக்கிழங்கில் அதிகமாக இருக்கின்றது.

உடல்பருமன்

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், உடல் பருமன் என்பது தவிர்க்க முடியாத பிரச்னையாக மாறியுள்ளது. பலரும் உடல் எடையை குறைக்க பல்வேறு பிட்னஸ் சென்டர்கள் மற்றும் மருத்துவரை அணுகி வருகின்றனர். ஆனால், இயற்கையாக உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், மரவள்ளி கிழங்கை அன்றாட உணவில் எடுத்துக் கொண்டால், அவற்றில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

மேலும், தலைவலி, முதுகுவலி பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மரவள்ளிக்கிழங்கை தொடர்ந்து உண்டு வர இந்த பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.மேலும், மரவள்ளிக்கிழங்குக்கு ஞாபக சக்தியை வளர்க்கும் ஆற்றல் உண்டு. அத்துடன், ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மரவள்ளி கிழங்குகளில் இருக்கும் வைட்டமின் கே மற்றும் கால்சியம் ஆகியவை எலும்புகளை வலுவாக்குகின்றன.

The post மரவள்ளிக்கிழங்கின் மருத்துவ குணங்கள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED அதிசுத்தம் சோறு போடுமா? ஓசிடி Obessessive Compulsive disorder