×

மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மீது வழக்குப்பதிவு: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: மியான்மர் நாட்டில் நடந்த மின்கசிவை சென்னை மெரினா பகுதியில் நடந்ததுபோல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட, அதிமுக தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடந்த மாதம் இறுதி வாரத்தில் சென்னையில் பலத்த மழை பெய்தது. அப்போது சென்னை மெரினா கடற்கரையில் மழை வெள்ளத்தால் மின் இணைப்பு பெட்டி ஒன்று தீப்பிடித்து எரியும் வகையில் வீடியோ ஒன்று டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவை டேக் செய்து அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல் சில கருத்துக்களுடன் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் ஆய்வு செய்த போது, அது மியான்மர் நாட்டில் ஏற்பட்ட வெள்ளபெருக்கின் போது மின்இணைப்பு பெட்டி எரியும் காட்சி என உறுதிசெய்யப்பட்டது. ஆனாலும் இந்த வீடியோவை சி.டி.ஆர் நிர்மல்குமார் நீக்கியிருந்தார். இருப்பினும் பொதுமக்களிடையே திட்டமிட்டு வதந்தியை பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

The post மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மீது வழக்குப்பதிவு: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CHENNAI ,C.T.R. ,Chennai Marina ,Nirmalkumar ,Dinakaran ,
× RELATED அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை...