துபாய்: ஐசிசி டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி புரூக், சக வீரரான ஜோ ரூட்-ஐ பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். 2022ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹாரி புரூக், வெறும் 23 போட்டிகளில் 2280 ரன்கள் குவித்துள்ளார். இவர் 8 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் ப்ரூக் 898 புள்ளிகள் பெற்று ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மொத்தம் 897 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 812 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
811 புள்ளிகளுடன் இந்திய அணியின் இளம் வீரர் யாசவ் ஜெய்ஸ்வால் 4வது இடத்தில் உள்ளார். டாப்-5ல் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர் ஜெய்ஸ்வால் மட்டுமே. அடிலெய்டு டெஸ்டில் அபார சதம் அடித்த டிராவிஸ் ஹெட் இம்முறை 6 இடங்கள் ஏறி 781 புள்ளிகளுடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இலங்கையின் கமிந்து மெண்டிஸ் 6வது(759புள்ளிகள்) இடத்திலும், தென்னாபிரிக்காவின் டெம்பா பவுமா 7வது (753புள்ளிகள்) இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 8வது(729புள்ளிகள்) இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 9வது இடத்தில் உள்ளார். மொத்தம் 724 புள்ளிகளுடன், டாப்-10ல் இடம்பிடித்த இரண்டாவது இந்திய வீரர் பண்ட் ஆவார்.
The post ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் ஹாரி புரூக்! appeared first on Dinakaran.