×

குடிபாலா- எம்எஸ்ஆர் சர்க்கிள் வரை நான்கு வழிச்சாலை அமைக்க கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு

*அளவீடு செய்யும் பணி நடந்தது

சித்தூர் : சித்தூர் குடிபாலா முதல் எம்எஸ்ஆர் சர்க்கிள் வரை நான்கு வழி சாலையாக அமைக்க கலெக்டர் சுமித்குமார், சித்தூர் எம்எல்ஏ குரஜாலா ஜெகன்மோகன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலத்தில் எம்.எஸ்.ஆர் கிராஸ் முதல் தமிழக எல்லை வரையிலான ஆர் அண்ட் பி சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரிடம், சித்தூர் எம்எல்ஏ குரஜாலா ஜெகன்மோகன் தெரிவித்தார்.

அதன்படி கலெக்டர் சுமித் குமார் மற்றும் எம்எல்ஏ குரஜாலா ஜெகன்மோகன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று தமிழக எல்லையில் இருந்து சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் வரை சாலையை நான்கு வழி சாலையாக அமைக்கவும் சாலையில் குழிகள் உள்ளிட்டவை இல்லாமல் சீரமைக்கவும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் சுமித்குமார் கூறியதாவது:தமிழக எல்லையான ராணிப்பேட்டை சாலை முதல் வேலூர் சாலை தமிழக எல்லையில் இருந்து சித்தூர் மாநகரம் எம்எஸ்ஆர் சர்க்கிள் வரை நான்கு வழி சாலையாக மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என சித்தூர் எம்எல்ஏ தெரிவித்தார். அதன்படி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வரவழைத்து இருபக்கமும் சாலையை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

அதேபோல் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை கண்டு உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சித்தூர் மாநகரத்தை பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் இல்லாதவாறு நான்கு வழி சாலை மாநகரத்திற்குள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏவுக்கு உறுதியளித்துள்ளேன். பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றார்.பின்னர் எம்எல்ஏ குரஜாலா ஜெகன்மோகன் பேசியதாவது:

சித்தூர் மாநகர மக்கள் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். ஏராளமான பொதுமக்கள் தன்னிடம் சித்தூர் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நான்கு வழி சாலையாக மாற்றி அமைத்தால் முற்றிலும் போக்குவரத்து நெரிசலில் இல்லாமல் இருக்கும் என தெரிவித்தார்கள்.

இதனால் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தேன். மாவட்ட கலெக்டரும் உடனடியாக எனது கோரிக்கையை ஏற்று தமிழக எல்லையில் இருந்து எம்எஸ்ஆர் சர்க்கிள் வரை ஆய்வு மேற்கொண்டோம். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் வரை ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.

அதேபோல் தமிழக எல்லையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை ஆங்காங்கே சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இவை அனைத்தையும் கலெக்டர் உடனடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சாலையை சீரமைக்க உத்தரவு பிறப்பித்தார். சித்தூர் மாநகரத்தில் இருவாரம் பகுதியிலிருந்து எம்எஸ்ஆர் சர்க்கிள் சாலை, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எம்எஸ்ஆர் சர்க்கிள் சாலை, முருக்கம்பட்டிலிருந்து காந்தி சிலை சாலை வரை, தானா செக்போஸ்டில் இருந்து காந்தி சர்க்கிள் சாலை வரை, சந்தப்பேட்டை இருந்து காந்தி சாலை வரை நான்கு வழி சாலையாக மாற்றி அமைக்க உள்ளோம்.

இதற்கு சித்தூர் மாநகர மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் சித்தூர் மாநகரத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக மாற்றி அமைக்க முடியும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் கோரிக்கை வைத்தேன். அவர்களும் உடனடியாக சாலையை அகலப்படுத்தி நான்கு வழி சாலையாக மாற்றி அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள். இதற்காக மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும் மாநகராட்சி ஆணையருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநகராட்சி மேயர் அமுதா, சுடா சேர்மன் கட்டாரி ஹேமலதா, துணை மேயர் ராஜேஷ் குமார்ரெட்டி, பிஆர்இஇ சந்திரசேகர் ரெட்டி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, ஏ.எஸ்.மனோகர், ஆர் அண்ட் பி மாவட்ட அதிகாரி னிவாஸ், குடிபாலா சர்பஞ்ச் ஹேமாத்ரி நாயுடு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post குடிபாலா- எம்எஸ்ஆர் சர்க்கிள் வரை நான்கு வழிச்சாலை அமைக்க கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MLA ,Gudipala-MSR Circle ,Chittoor ,Collector ,Sumit Kumar ,Gurajala Jaganmohan ,Chittoor Gudibala ,MSR ,Gudibala- MSR circle ,Gudibala ,
× RELATED ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய...