×

குன்னூர் அருகே தாமாக முன் வந்து சாலை சீரமைப்பு பணியை துவக்கிய கிராம மக்கள்

குன்னூர் : குன்னூர் அருகே பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் கிராம மக்கள் தாமாகவே முன்வந்து சாலை சீரமைக்கும் பணிகளை துவங்கினர். நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சோலடா மட்டம் என்னும் கிராமம் உள்ளது.

அப்பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் கடந்த 2010 ம் ஆண்டு பல்வேறு போராட்டத்திற்கு பிறகு சாலை அமைக்கப்பட்டது. தற்போது 14 ஆண்டுகளாக இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை அப்பகுதி மக்கள் முன் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சோபிநாத் கூறுகையில் ‘‘ஊராட்சி சார்பாக நடைபெறும் அனைத்து கிராமசபா கூட்டத்திலும் நாங்கள் கோரிக்கைகளை முன் வைத்தோம். அதுமட்டுமின்றி கலெக்டரிடம் 4 முறையும், மாவட்ட வன அலுவலகத்தில் 3 முறையும் இது குறித்து மனு அளித்தோம்.

ஆனால் தற்போது வரை ஆவணம் சரிபார்ப்பு நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள். எங்களுக்கு வனப்பகுதிக்கு இடையே உள்ள சாலை சீரமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுக்கு மேலாக போராடி வருகிறோம். அருகிலுள்ள கோடமலை எஸ்டேட், அட்டடி போன்ற பகுதிகளுக்கு வருடத்திற்கு ஒரு முறை சாலை சீரமைக்கப்படுகிறது.

எங்களின் சாலை சீரமைக்கப்படாததால் அவசர காலத்தில் கூட ஆம்புலன்ஸ் வருவதில்லை. இதனால் நோயாளிகளை தொட்டியில் கட்டி தூக்கி செல்லும் போது பாதி வழியில் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை இவ்வாறு 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால் எங்களது சாலையை நாங்களே தற்காலிகமாக சீரமைத்து வருகிறோம். மீண்டும் சாலை சீரமைக்க கால தாமதம் ஏற்பட்டு வரும் பட்சத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்’’ என தெரிவித்தனர்.

The post குன்னூர் அருகே தாமாக முன் வந்து சாலை சீரமைப்பு பணியை துவக்கிய கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Solada Mattam ,Vandicholai Panchayat ,Coonoor District, Nilgiris District ,Dinakaran ,
× RELATED குன்னூரில் கட்டிட பணியின்போது...