×

சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்

*விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை நடவடிக்கை

தர்மபுரி : தர்மபுரி டவுனில் சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தர்மபுரி நகரம் மாவட்ட தலைநகரமாக உள்ளது. இங்கு தினசரி சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு பணிக்காக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து தர்மபுரி டவுன் பகுதிக்கு வந்து செல்கின்றனர். வெளிமாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்து செல்கின்றனர்.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்டத்தின் மாவட்ட அரசு அலுவலகங்கள், அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா அலுவலகம், பிடிஓ அலுவலகம், மாவட்ட பத்திரபதிவு அலுவலகம், மொத்த வியாபார கடைகள், 2 பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகியவைகளுக்காக தர்மபுரி டவுன் பகுதிக்கு மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.

இதனால் தர்மபுரி டவுனுக்கு வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, தர்மபுரி டவுன் பகுதியில் டூவிலர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு, பொருட்கள் வாங்கி செல்ல போதிய இடவசதி இல்லை. இதனால் பொதுமக்கள் கடைகள் முன்பு சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக அமைகிறது. போக்குவரத்து போலீசார் அவ்வவ்போது ஒலிபெருக்கியில் வந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனங்கள் எடுக்கும்படி எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி செல்கின்றனர்.

அப்படியிருந்தும் சிலர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும்வகையில் டூவிலர், கார், சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். குறிப்பாக, தர்மபுரி ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமிநாயுடு தெரு, முகமதுஅலி கிளப் ரோடு, துரைசாமி நாயுடு தெரு, சித்தவீரப்ப செட்டி தெரு, கந்தசாமி வாத்தியார்தெரு, கடைவீதி, பென்னாகரம் ரோடு, நேதாஜி பைபாஸ் சாலை உள்ளிட்ட நகரத்தின் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு அவ்வப்போது விபத்தும் நடக்கிறது.

எனவே நகரத்தின் ஏதாவது ஒரு பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்து, அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தர்மபுரி நகரப்பகுதி தினசரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

நகரத்திற்குள் வாகனங்கள் வருகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தர்மபுரி நான்கு ரோட்டிலிருந்து, அரசு மருத்துவமனை வரையிலும், முகமதுஅலிகிளப் ரோடு, ஆறுமுக ஆசாரி தெரு, பென்னாகரம்ரோடு, கிருஷ்ணகிரி ரோடு என தர்மபுரி நகரத்தில் பாதசாரிகள் நடந்து செல்ல நடைமேடை கிடையாது.

சாலை ஆக்கிரமிப்பால் மக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் வாகனங்கள் சாலையில் நிறுத்தி செல்லுவதால், இடையூறு ஏற்பட்டு விபத்து நடக்கிறது. வாகன எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப தர்மபுரி நகரத்தில், சேலம் போன்று அடுக்குமாடி பார்க்கிங் வசதி அமைக்க வேண்டும். சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற பெரு நகரங்களில் பாதசாரிகள் நடந்து செல்ல தனியாக பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் பாதசாரிகள் நடந்து செல்ல நடைமேடை அமைக்க வேண்டும். சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் கூறுகையில், தர்மபுரி நகரத்தில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பால் நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரம் மற்றும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க விரைவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் தர்மபுரி நகராட்சி ஆணையருடன் கலந்து பேசி நகரத்தில் டூவிலர்கள், கார் நிறுத்த இடம் தேர்வு செய்யப்படும் என்றார்.

The post சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Town ,Dinakaran ,
× RELATED தர்மபுரி நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்